என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடிக்கிறது.

    கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்து 20 ஆயிரத்து 319 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.

    இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது.

    • முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

    அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழரின் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியை கெடுத்துள்ளது.

    தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகெங்கும் வாழும் தமிழர்களை மொழி, கலாசாரம், வரலாற்று ரீதியாக இணைக்கிற பாலமாக அமையும்.

    பல்வேறு காலகட்டங்களில் பல தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும் இந்த கலாச்சார மையம் செயல்படும்.

    பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும்.
    • மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையம் 6 மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

    வடசென்னை அனல்மின் நிலையம்-3 அதன் முழுத்திறனை அடைந்திருந்தால், இதுவரை 600 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கும். ஆனால், இதுவரை வெறும் 68 கோடி யூனிட், அதாவது 11 சதவீதம் அளவுக்குத் தான் மின்சாரம் உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.13 செலவாகிறது.

    தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.3 முதல் 4 மட்டுமே செலவாகிறது. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்தின் திட்ட மதிப்பீடு இரு மடங்கிற்கும் மேலாகி விட்டதால், அதில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.6க்கும் கூடுதலாக செலவாகிறது.

    இவ்வாறாக மின்னுற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை திட்டமிட்டு தாமதப்படுத்துதல், அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் ஆகியவற்றால் தான் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியை நெருங்கும் நிலையிலும் தமிழக அரசும், மின்சார வாரியமும் மாறாமல், அதே அலட்சியத்துடனும், ஊழலுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டால் மின்சார வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தான் சுமைகள் சுமத்தப்படும்.

    எனவே, தமிழக அரசும், மின்சார வாரியமும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை இனியாவது இலக்கு வைத்து நிறைவேற்ற வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்.இ.டி.சி. பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.

    அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்படும்.

    • ஒரு துறையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு இபிஎஸ் பேச வேண்டும்.
    • 3 ஆண்டுகளில் 6700-க்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.

    சென்னை:

    மருத்துவ காலி பணியிடங்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஒரு துறையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு இபிஎஸ் பேச வேண்டும்.

    * போராடிய மருத்துவர்களுக்கு தண்டனையாக பணியிடமாற்றம் செய்தது அதிமுக அரசு.

    * ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு கூட தீர்வு காணப்பட்டுள்ளது.

    * திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 1947 உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    * 3 ஆண்டுகளில் 6700-க்கும் மேற்பட்ட மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.

    * 3 ஆண்டுகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

    • மக்கள் என்னும் சிங்கங்கள் அமைதியாக, பொறுமையாக இருப்பது இயலாமையால் அல்ல.
    • இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில்,

    உலகமே மிரண்ட, மனித சமுதாயமே அரண்ட, யாரும் கேட்டிராத கொரோனா என்ற கொடிய அரக்கனை எதிர்த்து தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நடுரோட்டில் விட்டது மற்றும் மக்கள் நலன் காக்கும் மருத்துவத் துறையை பாழாக்கியதுதான் இந்த விடியா திமுக-வின் 40 மாத கால சாதனை.

    'சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால், நரியும் நாட்டாமை செய்யும்' என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில், இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் உள்ளன. மக்கள் என்னும் சிங்கங்கள் அமைதியாக, பொறுமையாக இருப்பது இயலாமையால் அல்ல. சிங்கங்கள் பாயும் நாள் வரும், நாட்டாமை செய்யும் நரிகள் ஓட்டம் பிடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

    எனவே, உடனடியாக விடியா திமுக அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது.
    • ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை.

    மதுரை:

    மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.

    மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.

    பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

    பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.

    நடிகர் விஜயின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.

    ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் தடுக்காமல் தவறிவிட்டது

    முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரக்கூடும்
    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை:

    மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலு வடைந்து விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

    இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளுத்து வாங்கிய மழை வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது.


    இந்த நிலையில் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது.

    இது வடக்கு-வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

    இது வடக்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
    • பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.

    சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

    * மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.

    * பிஎம்ஸ்ரீ திட்டத்தை முன்னர் ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது.

    * பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.

    * இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    * தமிழக பள்ளிகளின் தரத்தை உட்கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்த பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

    • கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு.
    • மணமக்களை வாழ்த்திய விஜய்வசந்த்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    • தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகளாகவும், மிகப்பெரிய மருத்துவராகவும் உள்ளனர்.
    • மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.

    சென்னை:

    சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * இந்தியாவிலேயே சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான்.

    * தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இன்று பல்வேறு தளங்களில் உயர்ந்த நிலையில் உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகளாகவும், மிகப்பெரிய மருத்துவராகவும் உள்ளனர்.

    * சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இதை ஏற்க முடியாமல் தான் மாநில அரசின் கொள்கை மீது குற்றம் சொல்கிறார்கள்.

    * ஆசிரியர் பணி அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி.

    * தமிழக பாடத்திட்டத்தை யார் குறை சொன்னாலும் ஏற்க முடியாது.

    * தமிழ்நாடு பாடத்திட்ட முறையை குறை கூறினால் தமிழக ஆசிரியர்கள், மாணவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

    * மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.

    * தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள்தான், வருங்காலத்திலும் சிறந்து விளங்குவார்கள் என உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.

    தமிழக கல்வி முறையின் தரம் மோசம் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    • விஜய் வசந்த் ஆசிரியர் தின வாழ்த்து.
    • எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் `வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி' என்று ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

    ×