என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது.
- கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது.
சென்னை:
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இவரது பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அவர், கோர்ட்டு சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. தனக்கு கோர்ட்டு சம்மன் ஏதும் வரவில்லை. கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ந்தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சென்னையில் இருந்த போதும் சரி, நெல்லை மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் இருந்த போதும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். அங்கேயும் எதுவும் வரவில்லை. இதுகுறித்து கோர்ட்டில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
- சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு.
- கடற்கரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் திங்கள்கிழமை (16-ந்தேதி) ரத்து செய்யப்படும்.

கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரெயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"-குறள் 978, அதிகாரம் 98.
- சம்பவத்தை மையமாக வைத்து கனிமொழி எம்.பி. இக்கருத்தை பதிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை:
சென்னை அசோக்நகர் பெண்கள் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அசோக் நகர் பள்ளிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். காலை 10.30 மணியளவில் அர்ஜூன் சம்பத் அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்றார்.
ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளிக்கூட வாசலில் வைத்து அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணுவை பயங்கரவாதியை போல கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் நடைபெறும் உபதேசங்களை யாரும் கண்டு கொள்வது இல்லை.
ஆனால் திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அசோக்நகர் பள்ளி கல்வியில் சிறந்த பள்ளியாகும். அந்த பள்ளியின் புகழை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சில தனியார் பள்ளிகள் திட்டம் தீட்டியுள்ளன. மகா விஷ்ணு கைது நடவடிக்கையில் சதி நடந்து உள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
அசோக் நகர் பள்ளிக்கு சென்று நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டறியலாம் என்பதற்காகவே சென்றேன். ஆனால் உள்ளே செல்வதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் திரும்பி வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
- படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
- கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.
வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.
இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.
கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும்.
- கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களால் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதையும், தரம் மிக்க அசல் வஸ்திரங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதாவது 1985 ரக ஒதுக்கீடு தடைச்சட்டத்தில் உள்ள கோட்பாடுகள் முறையாக சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு விசைத்தறியில் எந்தவித ஜரிகையும் பயன்படுத்தி சேலை நெசவு செய்யக்கூடாது என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும். இதனால் கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இச்சூழலில் கைத்தறி தொழிலில் ஈடுபட நெசவு செய்யும் தொழிலாளர்கள் வரத் தயங்குகிறார்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, கைத்தறி தொழிலைப் பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்ட பணிகள்.
- நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பிலான 2 சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தேன்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
- நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
சென்னை:
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மின் தடை காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.
- தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் புறப்படும் முன்பு தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது.
அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.
இன-மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.
அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்கு தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா!
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது தி.மு.க. தான்.

செப்டம்பர் 15-இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்.
அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வருகிற 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தி.மு.க.வின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.
வட்ட வாரியாக-கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.
பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை.
தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ந்தேதி எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.
உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக-அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, 17-ந்தேதி அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.
இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டு மல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
- ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களை சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது.
ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கே எதிரி போல செயல்படுகிறார்.
இந்தியா குறித்து மிக தவறான கருத்துக்களை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தியின் செயல்பாடுகள் தேச விரோத செயலாகும்.
இந்தியா முழுதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.4,000 கோடிக்கு மேலாக நிதி தர வேண்டும். திட்டத்தின் விதிகளின் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.
முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது. அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள். 1985 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்.
தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.
நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட் டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்.
பா.ஜ.க. மது அருந்ததாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம்.
மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை. மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளி மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும்.
ஆகவே விஜய் திராவிட கட்சிகளுக்கு தான் போட்டியாளராக இருப்பார். விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க.விற்கு பாதிப்பில்லை, திராவிட கட்சிகளின் வாக்குகளைத் தான் விஜய் பிரிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
- டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






