என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது.
- தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அழகாபுரி சாலையில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் சிவ காசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் கவர் பிரிண்டிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 15-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் செயல்பாட்டில் இருந்த ஒரு எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது. அந்த எந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரும், மற்ற தொழிலாளர்களும் தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தப்பி வெளியேறினர். பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அருகில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற் சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் பிரிண்டிங் எந்திரம், பாலித்தீன் கவர் ரோல்கள் மற்றும் பிரிண்டிங் மை கேன்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து ஜூலை மாதம் 28-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும், அதனை தொடர்ந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்த ஆண்டில் அணை 2-முறை நிரம்பினாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1537 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 64.56 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா.
- மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது.
சென்னை:
தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் 28-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ், தமிழர் - தமிழ்நாடு என தி.மு.க. முழக்கத்தை வைத்தபோது, அது குறுகிய கண்ணோட்டம் என்று கருதியவர்கள் உண்டு.
ஆனால் இன்று மொழி, இனம் - மாநில உரிமை என்று அந்த முழக்கம் விரிவான பொருளைத் தருவதுடன், தமிழைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும், தமிழரைப் போல இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனமும், தமிழ்நாட்டைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே பன்முகத்தன்மையும் மதநல்லிணக்கமும் கொண்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை அனைத்து மாநில மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
இதுதான் 75 ஆண்டுகால தி.மு.க.வின் இந்திய அளவிலான தாக்கம். இதனை எடுத்துச்சொல்ல ஒரு பவள விழா போதாது. அந்த அடிப்படையில் தி.மு.க.வுடன் கொள்கை கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால் வருகிற 28-ந்தேதி பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாட உள்ளோம்.
காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமை கட்சியினர் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற பவள விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நம் கழகத்துடன் தோழமை உறவு கொண்டுள்ள ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். உங்களில் ஒருவனான நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன்.
'மக்களிடம் செல்' என்று கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னதை கட்டளையாக ஏற்று திராவிட மாடல் அரசு மக்களுக்கான பணிகளை தொய்வின்றி தொடர்ந்து வருகிறது.
மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே கழகத்தின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்தி பெறவிருக்கிறேன்.
28-ந்தேதி காலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாயில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.
இதன்பின்பு, காஞ்சிக்கு வருகிறேன். உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம். கொள்கை தோழமைகளுடன் பவள விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராக வன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ.கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோவில் தெரு.
கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.
வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேட்டத்தூரில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்றனர்.
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலா வேனில் ஊருக்கு திரும்பினார்கள். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூரில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தொழில்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தொழில்பாடங்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் தொழில் பயிற்றுநர்கள் நியமிக்கப்படாதது மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும். இது தெரிந்திருந்தும் இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை வழங்குவதற்காக புதிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.
அதேநேரத்தில், மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி, வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் தொழில் பயிற்றுநர்களை நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது. ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு தொழிற்பயிற்றுநர்களை நியமிக்க நிதியில்லை என்பதை நம்ப முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
- மின்சார ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் இன்று (25-ந்தேதி) முதல் 27-ந் தேதி வரையில் இரவு 12.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரால் வரும் மின்சார ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிளான கோ கோ போட்டி
- 17 வயது பிரிவில் கோவூர் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளி முதலிடம்
வண்டலூர், ரத்தினமங்கலத்தில் உள்ள ஸ்ரீ கிரீஷ் இண்டர்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவில் கோ கோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து 800 பள்ளிகளை சார்ந்த 10000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
14,17,19 வயது என மூன்று பிரிவின் கீழ் 4 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 19 வயது பிரிவில் என்.கே.வி.வித்யாலயா பள்ளியும் ,17 வயது பிரிவில் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளியும், 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயாவும் முதலிடம் பிடித்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சுந்தர் மற்றும் பள்ளித் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசு கோப்பையை வழங்கினர்.இதில் பள்ளி தாளாளர் கவுரி கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் ஜெயகார்த்திக் என பலர் கலந்து கொண்டனர்.

- செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
- குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.
அதில், அதிக புள்ளிகளை பெற்று செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.90 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்
குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையும் அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
- ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ வைரலானது.
- சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர். மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்ற ஜாமினில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோகன் ஜி கைதிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
- தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு பயங்கரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.






