என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    • குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    குளச்சல்:

    மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.

    இதற்கான கருத்துரு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு கடந்த 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தவிருந்தது. இதற்கு மீனவர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மணல் ஆலைக்கு மணல் அள்ளுவதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை திருத்தலம் முன்பாக மீனவர்கள் புறப்பட்டு பீச் சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் பங்குத்தந்தை ஜெகன் மற்றும் புனித காணிக்கை அன்னை திருத்தல நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு, பக்தர்கள் சபை, அனைத்து அமைப்பினர் உள்பட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

    மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மனித சங்கிலியை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க துணை தலைவர் ஜாண்சன் ஒருங்கிணைத்தார்.

    இதுபோல் குறும்பனையில் புனித இக்னேசியஸ் ஆலயம் சார்பில் ஊர்மக்கள் வாணியக்குடி முதல் ஆலஞ்சி வரை கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அமைப்புகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு)மதியழகன், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி, இணையம், கொட்டில்பாடு, தேங்காய்ப்பட்டினம் உள்பட 200-க்கும மேற்பட்ட கிராமங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100-க்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். 

    • ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
    • ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.

    தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
    • வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.

    இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.
    • இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

    தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவர்னரை, கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழி நடத்தக் கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.

    தற்போது தமிழக அரசியலில் கட்சி பேதமின்றி மக்கள் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தாமல், மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல், மக்கள் நல்ல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விவாதிக்காமல், மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாக, தனிப்பட்ட முறையில் தலைவர்களை, அவமானப்படுத்துவதும் கேலி பேசுவதும், குறிப்பாக பெண் தலைவர்களையும் விட்டு வைக்காமல் இகழ்வதும் அரசியல் அநாகரிகத்தின் உச்சகட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மூத்த தலைவர்களே, தங்களுடைய வாரிசுகளை தூண்டிவிட்டு அருவருப்பான அரசியல் விளம்பரத்திற்காக, தங்கள் கட்சியினர், வாரிசுகள், பேசும் அருவருக்கத்தக்க பேச்சுக்களை ரசித்து அழகு பார்ப்பது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

    தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனி நபர் தாக்குதல்களை புறம் தள்ளி, மனிதநேயத்தோடு பரஸ்பரம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறைஅதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

    அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
    • இதுவரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சொத்து வரி குறிப்பிட்ட காலகெடு வுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.

    5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டுகளில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.

    கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

    இதையடுத்து அவர்கள் வரியை கட்டினார்கள். சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.

    கடந்த 1-ந்தேதிக்கு முன்பே சுமார் 40 ஆயிரம் பேர் முன் கூட்டியே ஆன்லைனில் 6 சதவீத வரி உயர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.

    முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    • மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும்.
    • கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம்.

    திருச்சி:

    பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து, 8,096 ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இணையவழி முதல் சுற்று தேர்வில், 2,008 பேரும், 2-ம் கட்ட தேர்வில் இவர்களில் இருந்து 992 பேரும் தேர்வாகினர். இறுதி சுற்றில் 75 சதவீதம் அதற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் மாநில அரசின் கனவு ஆசிரியர்களாக தேர்வாகினர்.

    இவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 75 முதல், 89 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 325 ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 2 குழுக்களாக டேராடூன் சென்று திரும்பினர்.

    இதில் 90 முதல் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வருகிற 23-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை அவர்கள் பிரான்ஸ் நாட்டை சுற்றி பார்க்கின்றனர்.

    பிரான்ஸ் செல்லும் ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அவர்களது பயணம் சிறக்க வாழ்த்தினார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுவாக சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் ஆசிரியர்களை மாணவனாகிய நான் அழைத்துச் செல்கிறேன். தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளோம்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது ஆசிரியர் சார்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அங்கீகாரம் செய்யும் விதமாகவும் முதல் முறையாக ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

    பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது அதற்கு தகுந்தாற்போல் மாத்திரைகள் வழங்கப்படும். சில நேரங்களில் மாத்திரைகளை கொடுக்க தெரியாமல் கொடுத்து சோகமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    அது மாதிரி நடைபெறக்கூடாது என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி, சரியான முறையில் ஊட்டச்சத்து வழங்கவும் சில சமயங்களில் வயதிற்கு தகுந்த வளர்ச்சி குழந்தைகளுக்கு இல்லாத நிலையில், அதுபோன்ற குழந்தைகளையும் கண்டறிந்து பிள்ளைகளின் உடல்நலம் சார்ந்து ஒவ்வொன்றையும் அனைத்தையும் செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதலமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது.

    கல்விக்கு கோத்தாரி குழுமம் பரிந்துரை செய்துள்ளதை காட்டிலுமே கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி.எந்திரத்துடன் இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
    • காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

    சீசன் இல்லாத காலங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று வழக்கம் போல் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம்பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

    • 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற கூடும்.
    • நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    சென்னை:

    அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ந் தேதி (புதன்கிழமை) புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்க கடலில் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ந்தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன காரணமாக இன்றும், நாளையும் பெரும் பாலான பகுதிகளிலும், 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.

    தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்றும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மொத்தம் 21 மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும்

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனின் போது ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்கின்றனர்.

    அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிவார்கள்.

    மேகமலை, தூவானம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவிக்கு வந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று.
    • இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மாநாடு தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்."

    "அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள். மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி."

    "மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே. என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்."

    "இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள். பள்ளிச் சிறுவர் சிறுமியர். நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன்."

    "உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம். அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

    "மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை. கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.

    இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    அதில் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் இளைஞரணி மாநில துணைச்செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும், இளைஞரணி அமைப்பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம்பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

    இவை அனைத்தும் உதயநிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர் ளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சி பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    துணை முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல்பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப்படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்காளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகிகளை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    இளைஞரணி நிர்வாகிகள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×