என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.

    நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.

    தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.

    சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.

    தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் நாள் "உலக சிக்கன நாள்" கொண்டாடப்படுகிறது.
    • "செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்" என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தி வருமாறு:-

    பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் நாள் "உலக சிக்கன நாள்" கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த "உலக சிக்கன நாள்" வலியுறுத்துகிறது.

    பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், முறைசாராத் தொழிலில் ஈடுபடுவோர், சுய தொழில் புரிவோர், மகளிர் ஆகிய அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினைத் துவங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன். "செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்" என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிஷர்ட் கேஷுவல் உடையா?
    • அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கடும் கண்டனம் தொடர்ந்து எழுந்து வந்தது.

    இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் பொறித்த டிஷர்டை அணிந்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

    அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு பொருந்துமா?

    டிஷர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டபதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?

    அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என தமிழக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
    • தமிழகத்தில் நிகழாண்டில் 750-க்கும் அதிகமானோருக்கு பொன்னுக்கு வீங்கி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    மாதந்தோறும் 80-க்கும் மேற்பட்டோர் அந்த தொற்றுக்குள்ளாவதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.

    பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும்.

    ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    இந்நிலையில், தமிழகத்தில் நிகழாண்டில் 750-க்கும் அதிகமானோருக்கு பொன்னுக்கு வீங்கி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில் தற்போது பொன்னுக்கு வீங்கி பரவி வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் அந்த பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகி உள்ளது. இருந்தாலும், அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதே வேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்றார்.

    • அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள்.
    • அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.

    சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

    அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 2011-ல் ஆட்சி, 2016-ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்கள். அவர்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல்... எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கினார்கள்.

    அப்போது மட்டும் அம்மா அவர்கள் அமெரிக்க சென்று சிகிச்சை பெற்றிருந்தால் அம்மா இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால் அம்மா கேட்கல... ஆட்சி நல்லா இருக்கனும், கட்சி நல்லா இருக்கனும், ஆட்சியும் கட்சியும் 100 ஆண்டுகள் நல்ல இருக்கனும் சட்டமன்றத்தில் பேசினார்கள்.

    இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.

    • ஒரு கட்சியின் தலைவராக உள்ள விஜய் அவரது கட்சியின் கருத்தை தான் வெளிப்படுத்தி உள்ளார்.
    • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தான் கொள்கையே இல்லை.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி குறித்து கொள்கை அடிப்படையில் தான் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    * அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் அதைப்பற்றி விஜய் விமர்சிக்கவில்லை.

    * ஒரு கட்சியின் தலைவராக உள்ள விஜய் அவரது கட்சியின் கருத்தை தான் வெளிப்படுத்தி உள்ளார்.

    * விஜய் கூறியது சரியா? தவறா? என நான் எப்படி கூற முடியும்.

    * அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.

    * விஜயை ஏற்றுக்கொள்வீர்களா.. ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா.. என்ற கற்பனை கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

    * கொள்கை நிலையானது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமைப்பது கூட்டணி என்பது அதிமுகவின் நிலைப்பாடு.

    * தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

    * பாஜகவும் திமுகவும் ரகசிய உறவு என நாங்கள் ஏற்கனவே கூறியதை தான் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட மற்றவர்களும் கூறுகின்றனர்.

    * திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தான் கொள்கையே இல்லை.

    * அதிமுக வாக்குகளை எந்த சூழ்நிலையிலும் விஜயால் ஈர்க்க முடியாது.

    * மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேசுகிறார் விஜய்.

    * திமுகவை எதிர்த்து குரல் கொடுக்க அதிமுக மட்டும் இருந்துவந்த நிலையில் தற்போது தவெக உள்ளிட்ட சிலரும் ஆரம்பித்துள்ளனர்.

    * அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை பிரிந்து சென்றவர்கள் என இனி சொல்லாதீர்கள் என்று கூறினார்.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா சேலம் ரவுண்டானா என்ற இடத்தில் வரும்போது வேகத்தடை அருகே திடீர் பிரேக் போடப்பட்டது.
    • பின்னால் வந்த 3 கார்கள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

    உளுந்தூர்பேட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறு குடல் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 45) இவருடைய மனைவி கலைவாணி (வயது 42) ஆகியோர் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேலம் ரவுண்டானா என்ற இடத்தில் வரும்போது வேகத்தடை அருகே திடீர் பிரேக் போடப்பட்டது.

    இதனால் பின்னால் வந்த 3 கார்கள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காமராஜ், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தகவல் அறிந்த இடைக்கால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய காமராஜ் ,கலைவாணி ஆகிய இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது.
    • கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது 1279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2022-ம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 மாதங்களில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 1279 தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்காக ரூ.372.06 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

    அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் ஆகும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000கோடி ஆகும். ஆனால், கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது 1279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.

    ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்குவதை அரசு வழக்கமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?
    • தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிளவுவாத சக்திகள் என தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக கூறவில்லை. மேம்போக்காக பேசி இருக்கிறார்.

    * சிறுபான்மையினர் மீதான விஜயின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை.

    * இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?

    * பாசிச கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

    * பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.

    * தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.

    * திமுக மற்றும் திமுக அரசை, கலைஞர் குடும்பத்தை எதிர்ப்பதாகவே விஜயின் பேச்சு உள்ளது என்று அவர் கூறினார்.

    • பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா.
    • 2-ம் நாளான இன்று அரசியல் விழா.

    மதுரை:

    விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடை பெற்று வருகிறது.

    அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், பழனி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில்யாக வேள்வியுடன் தொடங்கியது.

    பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை, வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    முன்னதாக கமுதி பஸ் நிலைய பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பிருந்து ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து தேவர் நினை விடத்தில் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தேவரின் பக்தர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் வணங்கினர். மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.

    நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மேயர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.


    பின்பு புதூர் செல்லும் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத் தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

    பாதுகாப்பு முன்னேற்பா டுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன் கேமிரா பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    • எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும்.
    • திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்க உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. இதுவரை பல நபர்களை பார்த்துள்ளது. 1973-ல் எம்.ஜி.ஆர் போன்ற பல தலைவர்களை கடந்து தான் தி.மு.க. வந்துள்ளது.

    தி.மு.க. பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம் தி.மு.க.

    75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். இன்னும் 100 ஆண்டு காலம் ஆனாலும், இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக இருக்கும். போராடக்கூடிய தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பார்.

    அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோஷம், மகிழ்ச்சி. ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு கஷ்டம் வரும் என்றால் அது இல்லை.

    எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள். எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும். விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை

    தந்தை பெரியாரின் திராவிட மாடலையும், ஒரு காலத்தில் காங்கிரஸ் சோசியலிசம் பேசியது. காமராஜர் மற்றும் அப்போது இருந்த தலைவர்கள் அனைவரும் பேசினார்கள். இதை குறையாக கூறவில்லை. அவர்கள் சமத்துவம் என்ற சோசியலிசத்தை நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் கொண்டு வருவோம் எனக்கூறினார்கள். தற்போது வரை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

    ஆனால் தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என 2 கோடி பேர் பயனடைகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம் வாழ்க்கை தரம் உயர்கிறது. கிராமப் பொருளாதரமும் உயர்ந்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்

    திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.

    கூட்டணியில் பங்கீடு குறித்து விஜய் பேசியதற்கு வி.சி.க. ஆதரவு தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு...

    இதுகுறித்து முதலமைச்சர் கொள்கைகளை வகுப்பார்.

    இதுவரை தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஒற்றைக் கொள்கையுடன் இருக்கிறார்கள். பதவி என்பதை கூட்டணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்பதே எனது கருத்து. தனித்து தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 முறை ஆட்சி அமைத்துள்ளோம் கூட்டணி ஆட்சி என்று இருந்ததில்லை.

    வருங்காலங்களில் எங்களது முதலமைச்சர் கொள்கை திட்டங்களை அறிவிப்பார். அதற்கு ஏற்றார் போல் தேர்தல் களம் அமையும்.

    உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் ஆலோசனை கேட்கப்படும். மேலும் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது நடத்தப்படும் எனக் கூறுகிறார்களோ அப்போது நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது.
    • 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    சென்னை:

    புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வாக்காளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 2 நகல்கள் வழங்கப்படும்.

    இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 பேர் ஆவார்கள்.

    பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பேர் உள்ளனர். 3-ம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பெரிய சட்டசபை தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் மிகக்குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள கீழ் வேளுர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

    வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    நவம்பர் மாதம் 16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

    இந்த திருத்தங்களை செய்ய உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாயி புத்தகம், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தலாம்.

    வயதுக்கு சான்றளிப்பதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் படங்களை வாக்காளர்கள் அளிக்க வேண்டும்.

    வெளிநாட்டில் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பும் பட்சத்தில் பாஸ்போர்ட்டின் நகலை கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.

    ஒருவர் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறினால் படிவம் 8ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். படிவம் 6 புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவம் ஆகும்.

    படிவம் 6 பி என்பது வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றளிக்கும் படிவமாகும். படிவம் 7ஐ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×