என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துறையூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துறையூர் போலீசார் கோவிந்தாபுரம் பிரிவு சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் காரில் இருந்த மர்மநபர்கள் காரினை நிறுத்தாமல், வேகமாக துறையூர் நோக்கி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காரினை துரத்திச் சென்ற துறையூர் போலீசார் பாலக்கரை பகுதியில் காரினை மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமாராம் தேவவாசி (வயது 38), மனோகர் சேசன் (29) என்பதும், அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் காரினுள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 575 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஜோதிகா அதனை இன்று அதிகாலையில் நிறைவேற்றினார்.
- தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவிக்கிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கரட்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). செங்கல்சூளை காளவாசலில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிகா (23) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் உடப்பன் (19). கட்டிட தொழிலாளியான இவர் டைல்ஸ் கல் பதிக்கும் வேலை செய்து வருகிறார். செங்கற்சூளைக்கு கணவருக்கு சாப்பாடு கொடுக்க சென்று வரும்போது உடப்பனை பார்த்துள்ளார். அப்போது முதல் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் அதுவே கள்ளக்காதலாக மாறியது.
இதனால் ஜோதிகா கணவர் வேலைக்கு சென்றதும், பிள்ளைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக கணவரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கள்ளக்காதலனுடன் சல்லாபத்தில் இருந்த ஜோதிகா கணவரையும், குழந்தைகளையும் வெறுக்க தொடங்கினார்.
கண்ணை மறைத்த கள்ளக்காதலால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜோதிகா தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு உடப்பனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். அதன்பிறகே மனைவியின் தகாத உறவு கணவர் சரவணனுக்கு தெரியவந்தது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மேலான அக்கறையில் ஜோதிகா திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் சரவணன் தயாராக இருந்தார்.
அதன்பேரில் இருவீட்டாரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பிடித்து ஒருவழியாக ஜோதிகாவை சமரசம் பேசி அழைத்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவர் சரவணனுடன் ஜோதிகாவை சேர்த்து வைத்து குழந்தைகளுக்காக பொறுப்புடன் குடும்பம் நடத்துமாறு ஜோதிகாவுக்கு அறிவுரையும் கூறிச்சென்றனர்.
என்னதான் மனைவி திரும்பி வந்தாலும், கள்ளக்காதலனுடன் அவர் சென்றது சரவணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஜோதிகா மனம் திருந்தி வந்ததாக அவர் கூறினாலும், தொடர்ந்து உடப்பனுடன் தொடர்பில் இருந்து வந்தார். இதனை சரவணன் கடுமையாக கண்டித்துள்ளார். இது ஜோதிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கணவருடன் குடும்பம் நடத்தும்வரை கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாது என்ற நினைத்த ஜோதிகா அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.
இதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஜோதிகா அதனை இன்று அதிகாலையில் நிறைவேற்றினார். அதன்படி இன்று அதிகாலையில் ஜோதிகாவின் கள்ளக்காதலன் உடப்பன், தனது நண்பர் ஒருவருடன் சரவணன் வீட்டிற்கு வந்தார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சரவணனை ஜோதிகாவுடன் சேர்ந்து உடப்பன், அவரது நண்பர் 3 பேரும் சரவனின் கழுத்தை அரிவாளால் கொடூரமாக அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடப்பனும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய ஜோதிகாவை கைது செய்தனர்.
மேலும், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலை நடந்த சிறிது நேரத்திலேயே தப்பி ஓடிய உடப்பன் மற்றும் அவரது நண்பர் மதுரை கருப்பாயூரணி, கல்மேட்டை சேர்ந்த சிவா (18) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவிக்கிறது.
- கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
- பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று பெரும்பாலான மக்கள் பல்வேறு கவலைகள், பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
- அன்னபூரணி சாமியாரின் கணவர் அரசுவின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலர் கூறி வந்தனர்.
நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பவர் 28-ந்தேதி நான் என்னுடைய ஆன்மிகத்திற்காக தன்னை அர்ப்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அன்னப்பூரணி சாமியார்...
யார் இந்த அன்னபூரணி சாமியார்?
அன்னபூரணி சாமியார்... கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்பட்டவர் இவர்தான். பளபளக்கும் பட்டுச்சேலையில் காட்சியளித்தபடி மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்தனர். இதற்கு காரணம் இவரது கடந்த கால வாழ்க்கையே ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது.
சொகுசு இருக்கையில் அமர்ந்தபடி அன்னபூரணி சாமியார் புள்மேக்கப்புடன் மக்களுக்கு அருள்வாக்கும், ஆசி வழங்குவதையும் அவரது முந்தைய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பலரும் பரப்பி அதனை புது டிரெண்டிங்காக மாற்றினார்கள். அருள்வாக்கு சொல்லும் அன்னபூரணி இருக்கையில் இருந்தபடியே மேலும் கீழும் ஆடியபடி கைகளை உயர்த்தி ஆசி வழங்கும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களில் வயது வித்தியாசம் இன்றி பலரும் அவரது கால்களில் விழுந்து கிடக்கிறார்கள். அன்னபூரணி சாமியாரின் இந்த "ஸ்பிரிங்" ஆட்டத்தையும் பல விதங்களில் விமர்சனம் செய்து நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இன்று பெரும்பாலான மக்கள் பல்வேறு கவலைகள், பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இதுபோன்ற இயலாமையை பயன்படுத்திக் கொண்டு பெண் சாமியார் அன்னபூரணி வால்போஸ்டர்கள் மூலமாக "உங்களது பிரச்சனைகள் தீர எங்களை நாடி வாருங்கள்" என்று விதவிதமான போஸ்டர்களையும் அச்சடித்து ஒட்டி பல இடங்களில் அருள்வாக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது அதற்கான ஏற்பாடுகளை செய்ய தனிக்குழுவும் செயல்பட்டு உள்ளது.
தீராத நோய்கள் தீரும்... உங்கள் மனக்குறைகள் அகலும்... திருமண தடைகள் நீங்கும்... என்று மக்கள் தினந்தோறும் பிரச்சினைகளை முன்நிறுத்தியே பெண் சாமியார் அன்னபூரணி பிரசாரங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அனைத்துவிதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்க சக்தி அவதாரமாக திகழும் அன்னபூரணி சாமியாரை வழிபடுவோம் வாருங்கள் என்றும் தாயின் பாத கமலங்களில் தஞ்சம் அடைவோம் என்றும் போஸ்டர்களில் கவர்ந்திழுக்கும் வாசகங்களை குறிப்பிட்டு அருள்வாக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அன்னபூரணி பல இடங்களில் தனது கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் மூலம் பொதுமக்களை கட்டி போட்டுள்ளார். பல இடங்களில் அருள் வந்து ஆடுவது போன்று பார்வையாலேயே ஆசி வழங்கி உள்ளார்.

அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் அவரே பரப்பி உள்ளார். அதனை பார்த்து பலரும் கூட்டம் கூட்டமாக அவரது அருள் வாக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளனர். அப்போது தன்னை நம்பி வந்துள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவரிடம் இருந்து அதிக அளவில் காணிக்கையாக பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அன்னபூரணி சாமியாரின் கணவர் அரசுவின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில், அன்னபூரணி தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் மூலம் அவர் 3வது திருமணம் செய்ய உள்ளது உறுதியாகி உள்ளது.
நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும் என்று கூறியுள்ளார்.
அன்னபூரணி 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் திருமணத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். அதன்பிறகு 2வதாக அரசு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஈரோட்டில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
- ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை படு ஜோராக நடந்தது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது.
இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர் மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் தேனி, மதுரை மற்றும் கேரளா வியாபாரிகளும் வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என இருவகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், இறைச்சிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர். ஆட்டின் உயரம், எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று சுமார் ரூ.3 கோடி வரை விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்று கொண்டு பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
திருப்பூர்:
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றது. இதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , குஜராத் , பீகார் , ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் முதல் போனஸ் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூரில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து டாடாநகர் செல்லும் ரெயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.
போதிய இடவசதி இல்லாத காரணத்தால் பயணிகள் ரெயில் படிக்கட்டில் நின்றவாறும் , ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்றும் பயணம் மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று செல்வதால் ஒரே நேரத்தில் பயணிகள் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. சிறப்பு ரெயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்பட உள்ள நிலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கோவையிலேயே அதிக பயணிகள் ஏறி விடுவதால் திருப்பூர் வரும்போது பெட்டிகள் நிரம்பி விடுவதால் திருப்பூரில் இருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளை அதிகளவில் இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
- தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2 மடங்கு அதிகரித்து உள்ளன.
- நாளை தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஆலந்தூர்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி,கோவை செல்லும் ஏராளமானோர் விமான பயணத்தை தேர்வு செய்து உள்ளனர். இதன் காரணமாக உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதுகிறது. இதனால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2 மடங்கு அதிகரித்து உள்ளன.
சென்னை-தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,109 ஆகும். இன்று விமான கட்டணம் ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உள்ளது. இதேபோல் மதுரைக்கு ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரையும், திருச்சிக்கு ரூ.8,211 முதல் ரூ.10,556 வரையும், கோவைக்கு ரூ.7,872 முதல் ரூ.13,428 வரையும், சேலத்திற்கு ரூ.8,353 முதல், ரூ.10,867 வரையும் கட்டணமாக உள்ளது.
நாளை தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதைப்போல் திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ,டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் உயர்ந்து உள்ளன.
- சத்தியவாணி முத்து நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 73 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.
- வண்டலூர் அருகேயுள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் 20.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் குப்பைமேடு திட்டப் பகுதியில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 85 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணி முத்து நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 73 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், டோபி கானா திட்டப்பகுதியில் தூண் மற்றும் நான்கு தளங்களுடன் 31 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; ராதாகிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், குள்ளங்கரடு திட்டப்பகுதி யில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 37 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அக்கரை கொடிவேரி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 21 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 30 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
கோயம்புத்தூர் மாவட்டம், சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 222 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 24 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.
தஞ்சாவூர் மாவட்டம், வலையன் வயல் திட்டப் பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.
திருச்சி மாவட்டம், டாக்டர் ஜே.ஜே.நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களு டன் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் 108 புதியஅடுக்கு மாடி குடியிருப்புகள் என மொத்தம் 426 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 ஆயிரத்து 268 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதுபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கலையரங்கம், விடுதிகள், உள்விளையாட்டு அரங்கங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கான கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் சென்னை, பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் 23.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம், உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் 20.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் சென்னை, அய னம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.
சென்னை, வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 1.91 ஏக்கர் பரப்பளவில் 19.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலாவும் தளம், படகு சவாரி, மகரந்த சேர்க்கை பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள். செங்கல்பட்டு மாவட்டம், சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, யோகா பயிற்சி பகுதி, ஏரியை பார்வையிடும் பகுதி என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகின்றன.
சென்னை, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் விதமாக 2.14 ஏக்கர் பரப்பளவில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் இயற்கை நடைபாதை, பசுமை பூங்கா, புல்வெளி, சிறுவர் விளையாட்டுத் திடல், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், உடற்பயிற்சி இயந்திரங்கள் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்அன்சுல் மிஸ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
- போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வங்கிக்கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வங்கிக்கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.
நேற்றிரவு வங்கிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு இன்று காலை முதல் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கவி பாரதி துர்கா என்பவர் தொகுத்து வழங்கி இருந்தார்.
- மாநாட்டை தொகுத்து வழங்கிய துர்கா தேவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி... கவிபாரதி துர்காதமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் பலரால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கை குறித்தும் சுமார் 48 நிமிசத்திற்கு தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக முதல் மாநாட்டில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது. மாநாட்டை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கவி பாரதி துர்கா என்பவர் தொகுத்து வழங்கி இருந்தார். இதனிடையே மாநாட்டை தொகுத்து வழங்கிய துர்கா தேவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி என்று கவிபாரதி துர்கா வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழர்களுக்கும் வணக்கம். நான் தான் உங்க கவிபாரதி துர்கா. தவெக முதல் மாநில மாநாட்டின் தொகுப்பாளினி நான்தான். இந்த பெரிய மேடையை எனக்கு கொடுத்த தவெக தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். என்னோட நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களோட ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த மாதிரி சப்போர்ட் தான் என்னை மாதிரி ஒரு சாமானிய பெண்ணுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ரொம்ப நன்றிங்க... நான் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்திருக்கு... ரொம்ப ரொம்ப நன்றி. ப்ளீஸ் சப்போர்ட் மீ என்று கூறினார்.
- பல மாதங்கள் கடந்தும் வாடிக்கையாளா்களுக்கு வைப்புத் தொகையோ அல்து வட்டியோ எதுவும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- தலைமறைவாக இருந்த தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மயிலாப்பூரில் இந்து நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ் இருக்கிறார். இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தோ்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
இதற்கிடையே நிதி நிறுவனம் சார்பில் அதிக வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் தேவநாதன் யாதவ் பணம் பெற்றதாகவும், அவற்றை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் லட்சக்கணக்கில் பணத்தை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். ஆனால் பல மாதங்கள் கடந்தும் வாடிக்கையாளா்களுக்கு வைப்புத் தொகையோ அல்து வட்டியோ எதுவும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி தேவநாதன் யாதவ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு ஜாமின் வழங்க முடியாது என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
- ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றுள்ளார்.
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'கனவு ஆசிரியர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28-ந்தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தின்போது புகழ்பெற்ற இடங்களை ஆசிரியர்களுடன் பார்வையிட்ட புகைப்படங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வள்ளுவரையும், அன்னைத் தமிழையும் போற்றினோம். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பிரான்ஸ் தமிழ்க் கலாச்சார மன்றத்தினருக்கு அன்பும் நன்றியும் என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வீடியோவை எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.






