என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டிகை விடுமுறை- சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
- ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்று கொண்டு பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
திருப்பூர்:
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றது. இதற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , குஜராத் , பீகார் , ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் முதல் போனஸ் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூரில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து டாடாநகர் செல்லும் ரெயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.
போதிய இடவசதி இல்லாத காரணத்தால் பயணிகள் ரெயில் படிக்கட்டில் நின்றவாறும் , ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் நின்றும் பயணம் மேற்கொண்டனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று செல்வதால் ஒரே நேரத்தில் பயணிகள் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. சிறப்பு ரெயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்பட உள்ள நிலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கோவையிலேயே அதிக பயணிகள் ஏறி விடுவதால் திருப்பூர் வரும்போது பெட்டிகள் நிரம்பி விடுவதால் திருப்பூரில் இருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளை அதிகளவில் இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.






