என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்.
    • பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

    சிஎன்ஜி கேஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அங்கு இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பெட்ரோல் பங்கில் கேஸ் வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது



    • தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயிலானது, நாளை மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைகிறது. அதே ரெயில் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் காலை 11.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு தாம்பரம் வந்தடைகிறது.

    • சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர்.
    • தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திருநாள் வரும் 31ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் மக்கள், தீபாவளியை சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக புறப்பட்டு வருகின்றனர். அதிகப்படியான மக்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் (புதன்கிழமை) விடுமுறை எடுத்துக்கொண்டு இன்றில் இருந்தே சொந்த ஊர் புறப்பட தயாராகிவிட்டனர்.

    நாளை இதை விட இன்னும் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், மக்கள் இன்று மாலையில் இருந்தே சொந்த ஊர் புறப்பட்டு வருவதால், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக, சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தோர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவும், புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அவர்களை அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி வரிசையில் நின்றவாறு ரெயில்களுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். பஸ், ரெயில் நிலையங்களில் இன்றே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், நாளை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நவம்பர் மாதம் 1-ஆம் (01.11.2024) தேதி முதல் புதிய படங்களை துவகக வேண்டாம்.
    • நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும்.

    மறு அறிவிப்பு செய்யும் வரை வரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் (01.11.2024) தேதி முதல் புதிய படங்களை துவகக வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

    தென்னிந்திய நடிகர சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

    இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம். நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    சிலர் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பை வரவேற்றனர். இந்த நிலையில், த.வெ.க. மாநில மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு இன்று பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "இந்த விஷயம் தொடர்பாக எங்களது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணன் பதில் அளித்துவிட்டார். அதை தவிர வேறு எதையும் கூற விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

    முன்னதாக விஜய் என்ன பேசினார் என்பதை பார்க்கவில்லை என்றும், பார்த்துவிட்டு பதில் அளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 3 மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    31-ந்தேதி மற்றும் 1-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    3 மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    31-ந்தேதி (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
    • பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் செல்லும் வசதியாக நாளை மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
    • போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சவுதாபுரம் ஓலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவர் காளிப்பட்டி சின்ன பூசாரி காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு அவரை வெளியூருக்கு அழைத்து சென்றார்.

    இது குறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரகாஷை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது.
    • டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    இரணியல்:

    கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் பாறசாலையில் இருந்து டெம்போ குமரி மாவட்டத்திற்கு வந்தது. அந்த டெம்போ வரும்போது சாலை முழுவதும் நீர் வடிந்தவாறு சென்றது. அந்த டெம்போ செல்லும்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த டெம்போவை வாலிபர்கள் சிலர் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த டெம்போவை சிறை பிடித்தனர்.

    இது குறித்த தகவல் பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியினரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார், வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். களியக்காவிளை சோதனை சாவடியை தாண்டியே இந்த கழிவு ஏற்றி வரும் லாரிகள் வருகிறது. அங்குள்ள சோதனை சாவடியில் உள்ள போலீசார் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கழிவு ஏற்றி வந்த டெம்போவிற்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து, டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே டெம்போவிற்கு அபராதம் விதிக்க வேண்டும். கோழி கழிவுகளுடன் டெம்போவை குமரி எல்லை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் விடிய விடிய அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே உள்ளார்.
    • சவுக்கு சங்கருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே உள்ள சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அக்டோபர் 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினார் .

    இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது. திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

    இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • த.வெ.க. முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது.
    • மாநாடு குறித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து த.வெ.க. தலைவர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. : 29.10.2024 வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம், பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள். நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம்."

    "இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது?"

    "மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி."

    "குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய நம் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள், திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச்செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் திரு. பி.வெங்கட்டராமன் அவர்கள். கழகத்தின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த திரு. ஆர்.பரணிபாலாஜி. (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்)."

    "திரு. என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு.ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி). திரு. ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

    "தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் திரு. ஜே. பி. விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றி."

    "மாநாட்டில், நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி."

    "எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி."

    "மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி."

    "இதனிடையே. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து. தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். கலந்துகொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு இதயங்கள் இடையேயான அன்பின் முன். இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை."

    "இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கழகத் தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல. வார்த்தைகளைத் தேடித் தேடி கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்கி நிற்கிறேன்."

    "எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்."

    "உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி."

    "நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம். கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில் காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன்."

    "இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை, மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும், அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன். இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான். மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன்."

    "இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக. தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்."

    "என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக. பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன். கட்டுப்பாடான, கண்ணியமான. ஆரோக்கியமான, உத்வேகமான. உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர்."

    "நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்."

    "அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல், அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்."

    "ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன."

    "நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும். விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே. நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார்.
    • மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (வயது 35). இவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார்.

    மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு செல்லும் ஆனந்த கலைச் செல்வன், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பாலியல் ரீதியில் அந்த மாணவியிடம் பேசி, ஏமாற்றி வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார். மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.

    அந்த மாணவி வசதியான வீட்டை சேர்ந்தவர் என்பதால், அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். முதலில் வேறு வழியின்றி பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்து வந்த மாணவி, ஒருகட்டத்தில் ஆனந்த கலைச்செல்வனின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தீவிர விசாரணை நடத்தி வந்தார். இதில் மாணவியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த உறுதியானது. மேலும் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்நேற்று இரவு ஆனந்த கலைச்செல்வனை கைது செய்ய, போலீசார் கே.டி.சி. நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் இரவு பணிக்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆனந்த கலைச்செல்வனை கைது செய்தனர்.

    ×