என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.
- 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.
சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அப்டேட்டில் இல்லாத அரசியல் தலைவராக சீமான் உள்ளார்.
* மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.
* 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.
* மருத்துவர்கள் பொறுப்பேற்று ஒருமாதமான நிலையில் அரசியல் தலைவராக சீமான் குற்றம்சாட்டுவது வருத்தம் தருகிறது.
* 14 பேரும் அக்.3-ந்தேதியே பணியில் சேர்ந்துவிட்டனர் என்று அவர் சீமானுக்கு பதில் அளித்துள்ளார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
விருதுநகர்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்ட தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு முதல் கள ஆய்வை கோவையில் கடந்த 5-ந்தேதி தொடங்கினார். அரசு விழாக்களுடன் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட தோடு, ஆலோசகளையும் வழங்கினார்.
தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான வழி முறைகளை தற்போது முதலே தொடங்கவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசியதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் (9-ந்தேதி) முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் வருகை தருகிறார். இரண்டு நாட்கள் விருதுநகரில் முகாமிட்டு இருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதாவது 9-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தரும் அவர் காலை 10 மணிக்கு விருதுநகர் வந்தடைகிறார். வழியில் மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.
பின்னர் அங்கிருந்து ஆர்.ஆர்.நகர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு விருதுநகர் வருகிறார். அங்கு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.
குறிப்பாக வாக்கு சதவீதம் குறைவாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். இதையடுத்து அருகிலுள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரவு விருதுநகரில் தங்கும் அவர் மறுநாள் (10-ந்தேதி) அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 6 தளங்களுடன் கூடிய இந்த கட்டிடம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 756 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்டம்புதூர் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 15 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து மதுரைக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், தங்களை உற்சாகப்படுத்தவும் வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.
- மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
- கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.
அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.
- பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கிடைப்பது இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் நடைமுறைக்கு வருகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது இன்னும் சில கடைகளில் தொடர்வதாக மதுவாங்குபவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இம்மாதிரி புகார்களை முழுமையாக நிவர்த்தி செய்வது மட்டுமின்றி கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி உள்ளது, இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியவும் டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிடடல் மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பரீட்சார்த்த அடிப்படையில் கையடக்க கருவி மூலம் 'பில்' வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கண்டறிந்து மென்பொருளில் சரி செய்தனர்.
இதைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இவற்றை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 4 ஆயிரத்து 829 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
- ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள்.
சென்னை:
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.
அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சைபசேலேன காட்சி அளிக்கிறது. இது தவிர சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக மாறியது.
இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது பெய்த திடீர் மழை மற்றும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது. இதே போல் கடந்த சில நாட்களாக மழையும் இல்லை. இந்த நிலையில் ஏற்காட்டில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கி கமல்ஹாசன் பிறந்தநாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு-பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் -மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டு சிறக்க விழைகிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்! என்று தெரிவித்துள்ளார்.
- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சமீபத்தில் உருவானது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
அனேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
- வடசென்னையில் இன்று காலை மிக கனமழை பெய்தது.
சென்னை:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சமீபத்தில் உருவானது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
அனேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். 10-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்த அமைப்பு வட தமிழகம் நோக்கி நகர்ந்தால், அடுத்த வாரம் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
வடசென்னையில் இன்று காலை மிக கனமழை பெய்தது. திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மணலி, ராயபுரம், காசிமேடு பகுதிகளில் காலை நீண்ட நேரம் மழை பெய்தது. இதனால் வட சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது.
மேலும் விலை அதிகரித்து ரூ.60 ஆயிரத்தையும் தாண்டிவிடுமோ? என்று நினைத்த நேரத்தில், தங்கம் விலை குறைந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920
05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840
04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960
03-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960
02-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-11-2024- ஒரு கிராம் ரூ. 105
05-11-2024- ஒரு கிராம் ரூ. 105
04-11-2024- ஒரு கிராம் ரூ. 106
03-11-2024- ஒரு கிராம் ரூ. 106
02-11-2024- ஒரு கிராம் ரூ. 106
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
- ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.
எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.
எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.
இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.
- 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.
சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.
பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






