என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார்.
- மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
நான் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டேன்.
நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமே கூறியுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அளிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.
பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பாஜகவும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா ? என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்.
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும் . குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது.
அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
- இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.
அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.
இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.
திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.

பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.
சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.
- இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்.
- டெங்கு கட்டுப்படுத்தப்பட் ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது.
சென்னை:
மருத்துவத்துறை 41 மாதங்களாக சீரழிந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மருத்துவத்துறை சார்பான எந்த குற்றச்சாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நேரடியாக விவாதிக்கத்தயார்.
* இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்.
* நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்.
* டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று கூறினார்.
மருத்துவத்துறையில் உள்ள குறைபாடுகளை இபிஎஸ் சுட்டிக்காட்டிய நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
- வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
- கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
- தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது.
- பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோ சென்றிருந்த போது அரியலூர் மாவட்டத்தில் 'டீன்ஷூஸ்' நிறுவன காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை செயல்படுத்துவதற்காக 15-ந் தேதி அரியலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீன்ஷூஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜெயங்கொண்டம் மகிமைபுரம் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் டீன்ஷூஸ் குழுமத்தின் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
- வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்.
- இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சீமான் கூறியதாவது:-
திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!
இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என கூறினார்.
- மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.
- 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.
சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அப்டேட்டில் இல்லாத அரசியல் தலைவராக சீமான் உள்ளார்.
* மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.
* 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.
* மருத்துவர்கள் பொறுப்பேற்று ஒருமாதமான நிலையில் அரசியல் தலைவராக சீமான் குற்றம்சாட்டுவது வருத்தம் தருகிறது.
* 14 பேரும் அக்.3-ந்தேதியே பணியில் சேர்ந்துவிட்டனர் என்று அவர் சீமானுக்கு பதில் அளித்துள்ளார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
விருதுநகர்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்ட தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு முதல் கள ஆய்வை கோவையில் கடந்த 5-ந்தேதி தொடங்கினார். அரசு விழாக்களுடன் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட தோடு, ஆலோசகளையும் வழங்கினார்.
தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான வழி முறைகளை தற்போது முதலே தொடங்கவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசியதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் (9-ந்தேதி) முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் வருகை தருகிறார். இரண்டு நாட்கள் விருதுநகரில் முகாமிட்டு இருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதாவது 9-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தரும் அவர் காலை 10 மணிக்கு விருதுநகர் வந்தடைகிறார். வழியில் மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.
பின்னர் அங்கிருந்து ஆர்.ஆர்.நகர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு விருதுநகர் வருகிறார். அங்கு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.
குறிப்பாக வாக்கு சதவீதம் குறைவாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். இதையடுத்து அருகிலுள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரவு விருதுநகரில் தங்கும் அவர் மறுநாள் (10-ந்தேதி) அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 6 தளங்களுடன் கூடிய இந்த கட்டிடம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 756 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்டம்புதூர் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 15 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து மதுரைக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், தங்களை உற்சாகப்படுத்தவும் வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.
- மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
- கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.
அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.
- பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கிடைப்பது இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் நடைமுறைக்கு வருகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது இன்னும் சில கடைகளில் தொடர்வதாக மதுவாங்குபவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இம்மாதிரி புகார்களை முழுமையாக நிவர்த்தி செய்வது மட்டுமின்றி கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி உள்ளது, இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியவும் டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிடடல் மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பரீட்சார்த்த அடிப்படையில் கையடக்க கருவி மூலம் 'பில்' வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கண்டறிந்து மென்பொருளில் சரி செய்தனர்.
இதைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இவற்றை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 4 ஆயிரத்து 829 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
- ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள்.
சென்னை:
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.
அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சைபசேலேன காட்சி அளிக்கிறது. இது தவிர சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக மாறியது.
இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது பெய்த திடீர் மழை மற்றும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது. இதே போல் கடந்த சில நாட்களாக மழையும் இல்லை. இந்த நிலையில் ஏற்காட்டில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.






