என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.
    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.

    இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை.


    ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத் துறையினா், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.
    • கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

    கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்

    இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.

    இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார்.

    கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றச்சாட்டாகும்.

    • கால்வாயில் மண் எடுப்பதால் ஆழம் அதிகரித்து உயிர் பலி ஏற்படும்.
    • பொன்னேரி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கால்வாயில் மண் எடுத்து ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    கிராமமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கால்வாயில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கால்வாயில் மண் எடுப்பதால் ஆழம் அதிகரித்து உயிர் பலி ஏற்படும். மேலும் கால்வாயின் கரையை பலப்படுத்த வேண்டும் என்றனர். அவர்களிடம் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பொன்னேரி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
    • போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். காவல்துறையினர் அனுமதி வழங்கிய நேரத்தில் போராட்டம் நடத்தாததால், காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.

    இதனால் காவல்துறையினருடன் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் கொட்டும் மழையில் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு ஆயிரக்கணக்கானோர் வந்தபின் அனுமதி மறுப்பது ஏன்? என போலீசாரிடம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். பின்னர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார்.

    • பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கனமழை நீடித்தது. இதனால் தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பொன்னேரி-திருவொற்றியூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி சென்றனர். முத்து மாரியம்மன் கோவில் அருகில் சாலையில் குண்டும் குழியுமான பெரிய பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து சென்றனர். இதேபோல் பொன்னேரி அடுத்த கும்முணிமங்கலம் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.


    பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குறைய வில்லை. இதனால் அவ்வழியே சென்றவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தள்ளியபடி சென்றனர். ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கியது. இன்று காலை 108 ஆம்புலன்சு ஒன்று நீண்ட நேரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து மெதுவாக சென்றது.

    இந்த சுரங்கப்பாதையானது மெதூர், பழவேற்காடு, சின்ன காவனம், பெரிய காவனம், திருப்பாலைவனம் என 100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 2 ராட்சத மோட்டார்கள் மூலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    வேங்கிக்கால்:

    நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.

    வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார்.
    • மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    நான் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டேன்.

    நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.

    இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமே கூறியுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அளிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.

    பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பாஜகவும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா ? என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர்.

    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும் . குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது.

    அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.

    மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.

    அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.

    இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.

    திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.


    பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.

    சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.

    • இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்.
    • டெங்கு கட்டுப்படுத்தப்பட் ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது.

    சென்னை:

    மருத்துவத்துறை 41 மாதங்களாக சீரழிந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மருத்துவத்துறை சார்பான எந்த குற்றச்சாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நேரடியாக விவாதிக்கத்தயார்.

    * இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்.

    * நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்.

    * டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று கூறினார்.

    மருத்துவத்துறையில் உள்ள குறைபாடுகளை இபிஎஸ் சுட்டிக்காட்டிய நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

    • வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
    • கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

    கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது.
    • பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோ சென்றிருந்த போது அரியலூர் மாவட்டத்தில் 'டீன்ஷூஸ்' நிறுவன காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதை செயல்படுத்துவதற்காக 15-ந் தேதி அரியலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீன்ஷூஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    ஜெயங்கொண்டம் மகிமைபுரம் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் டீன்ஷூஸ் குழுமத்தின் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.

    இந்த தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

    பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

    • வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்.
    • இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்.

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

    இது குறித்து சீமான் கூறியதாவது:-

    திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!

    நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!

    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!

    இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை!

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என கூறினார்.



    ×