கிருமித்தொற்று பாதிப்பு: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

இன்புளூயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.
கிருமித்தொற்று பாதிப்பு: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Published on

சென்னை:

பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.

இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை.

ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

மருத்துவத் துறையினா், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com