என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
    • போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    2024-ம் ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. இன்று நள்ளிரவு 2025 புத்தாண்டு பிறக்கிறது.

    2025-ல் செல்வம், வெற்றி, திருமணம் உள்பட முக்கிய நிகழ்வுகள், பிரார்த்தனைகள் அனைத்தும் எந்தவித தடையுமின்றி நிறைவேற வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும், கனவாகவும் உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதன்படி இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று இரவு வழிபாட்டு தலங்களில் திரள்வார்கள் என்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு கம்புகள் கட்டி வைத்துள்ளனர்.

    போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு.
    • ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது.

    சென்னை:

    ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ரெயில்வே புதிய கால அட்டவணை சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஜனவரி 1-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜனவரி 1-ந்தேதி) முதல் அமலாக உள்ளது. இதில் புதிய ரெயில்கள், ரெயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆகஸ்டு 31-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயான சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் (20627-20628), மார்ச் 12-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே ஓடும் மைசூர் வந்தே பாரத் ரெயில் (20663-20664) உள்பட 8 புதிய ரெயில்களின் அறிமுகம் இடம் பெற்றுள்ளன.

    கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு. ஜூலை 12-ந்தேதி முதல் சென்னை சென்ட்ரல் சத்யா சாய் பிரசாந்தி நிலையம்- சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (12691-12692) ஷிவி மொக்கா டவுன் வரை நீட்டிப்பு உள்பட 19 ரெயில்கள் செல்லும் வழித்தடங்களில் நகரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை சென்ட்ரல்-மைசூரு விரைவு ரெயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரெயிலின் எண் (12610) மாற்றப்பட்டு புதிய எண் (16552) வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 14 ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. 45 ரெயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி-நிஜாமுதீன் இடையேயான வாரம் இருமுறை ஓடும் விரைவு ரெயில் (12641) உள்பட 56 அதிவிரைவு ரெயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இதுபோல 46 மெயில், விரைவு ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது. மற்றபடி பெரும்பாலானவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, அமல்படுத்தப்பட்டவையாக உள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
    • மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

    வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயரை தாங்கியபடி வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் இருந்து கண்ணாமூச்சி காட்டியபடியே பயணித்தது.

    முதலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என நினைத்து, வலுஇழந்து, மீண்டும் உதயமாகி முன்பை காட்டிலும் வலிமையுடன் கடலில் நிலை கொண்டிருந்தது.

    புயல் உருவாவதில் எப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியதோ? அதேபோல், கரையை கடப்பதிலும் தன்னுடைய ஆட்டத்தை காட்டியது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக வைத்து கடந்த நவ.30-ந்தேதி புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.

     

    கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.

    தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் 'ஃபெஞ்சல்' புயல் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக்காடானது. ஊத்தங்கரை பகுதியில் மட்டும் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் ஊத்தங்கரை நகரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.

     

    கடலூர் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    குறிப்பாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார்கள், மினி வேன்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதேபோல ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினார்கள்.

    இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

     

     

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி. நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

    இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் தொங்கியவாறு நின்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை ஆஸ்பத்திரிக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு, மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர், இறந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    • ஜனவரி 3 அன்று பேரணி தொடக்கம்.
    • பாஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.

    வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னரை சந்தித்து பாஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 



    • போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
    • அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்களை கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் த.வெ.க தலைவர் விஜய் எழுதிய நோட்டீசை அந்த கட்சியினர் மாணவ, மாணவிகளிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் தலைமையில் த.வெ.க கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க கட்சியினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    • கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

    கடலூர்:

    வங்கக்கடலில் கடந்த பல நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் அலை அதீத சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் உட்புகுந்து உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றதால் மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. தற்போது நாளுக்கு நாள் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுமார் 40 அடிக்கு கடல் அலை முன்னோக்கி பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இது ஒரு புறம் இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் தேவனாம்பட்டினம் ஊருக்குள் மீன் விற்பனை செய்யும் இடம் உள்ளது. அதன் அருகாமையில் மீன் வலை பின்னும் கட்டிடமும் செயல்பட்டு வருகின்றது. தற்போது கடல் அலை அதிகளவில் சீறி பாய்ந்து வருவதால் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு வலை பின்னும் கட்டிடம் கடல் அலையில் அடித்து இழுத்து செல்லும் அவல நிலையில் உள்ளது.

    இதே நிலை தொடர்ந்தால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தேவனாம்பட்டினம் ஊர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

    மேலும் கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் மணக்குடி பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    நகைக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி பேழையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    • பதில்கள் அனைத்தையுமே மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மாணவியிடம் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை போலீ சார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.

    பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 2-வது நபர் யார்? என்பது பற்றி உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து நேற்று அதிரடி விசாரணையில் இறங்கின. மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யான பிரவீன் தீட்சித் ஆகியோர் நேற்று காலை 9 மணி அளவில் தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்ற இருவரும் அங்கிருந்தே தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

    அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தற்போது துணை வேந்தர் இல்லாத நிலையில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களே ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள்.

    மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவரும் இந்த கமிட்டியில் இருப்பவர்களை அழைத்து பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

    பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடத்தை சென்று பார்வையிட்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இரவு நேரத்தில் இந்த பகுதியில் போதிய வெளிச்சம் இருக்குமா? மாணவிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    27-ந்தேதி அன்று பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை கேட்டு அது தொடர்பான விளக்கத்தையும் கேட்டு பெற்றுள்ளனர்.

    இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர்களை அங்கு பணியாற்றும் மற்ற பணியாளர்கள் என அனைவருமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தையுமே மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.

    இதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோர், தோழிகள், மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரிடமும் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் தனியாக ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், இதன் பிறகு இந்த வழக்கில் போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையையும் படித்து பார்த்தனர். அப்போது மாணவி தங்களிடம் அளித்த தகவல்களும், போலீசாரிடம் அளித்த தகவல்களும் ஒன்றாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொண்டனர். இதன் பிறகு மாலையில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை நேரில் அழைத்து பல்வேறு தகவல்களை கேட்டனர்.

    உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார், சமூக நலத்துறை செயலாளர் வளர்மதி, டிஜி.பி. சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மகளிர் ஆணைய உறுப்பினர்களை நேரில் சந்தித்தனர்.

    சுமார் 1½ மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின் போது போலீஸ் கமிஷனர் அருண் பாலியல் வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் விளக்கி கூறியுள்ளார்.

    இந்த விசாரணையை முடித்துக் கொண்டு ஆணைய உறுப்பினர்கள் இருவரும் இன்று டெல்லி சென்றனர். மத்திய அரசிடம் அவர்கள் தங்களது அறிக்கையை தயாரித்து விரைவில் அளிக்கிறார்கள்.

    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறையில் தொடக்கத்திலிருந்தே ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன. ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.

    அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று வினா எழுப்பிய நான், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது. அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதற்குத் தான் வழிவகுக்கும். எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    அதேபோல், அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக வழங்கப்படும் கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.61 என்பது மிகவும் அதிகம் என்பதாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் அதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
    • குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

     

    சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று கடந்த மே மாதம் 4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணை நடந்த நிலையில், நள்ளிரவு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

    சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பெண் போலீசாரை தாக்க முயன்றது, அவதூறாகப் பேசியது, தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது ஆகிய புகார்களில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல புகார்களில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

     

    குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

     

     

    பின்னர் அவர் ஜாமின் கேட்டு அதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் தீர்ப்பை நீதிபதி செங்கமலச்செல்வன் கடந்த 24-ந்தேதி பிறப்பித்தார். அப்போது நீதிபதி, 15 நாட்களுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    நாளை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இப்போதிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பெரிய பெரிய ஓட்டல், ரிச்சார்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டின் போது ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புத்தாண்டின்போது ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். சிலர் கேட்கலை வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாகன ஓட்டிகள் மது அருந்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

    இதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது,

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றார்.

    • பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
    • சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பெருமாள் (வயது40) டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்த நிலையில், தருமபுரி அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த, சிறுமிகளின் பெற்றோர் நேற்று அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    அதில், பெருமாள், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்தனர். மேலும், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கும் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்தனர்.

    மேலும், பெருமாள் மீது கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவரை அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக, புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

    இதில், 3 சிறுமிகள் பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க வரலாம் என்பதால், அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×