என் மலர்
Recap 2024

புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கித்தவித்தவர்களை மீட்ட ராணுவத்தினர் - திருவண்ணாமலை மண் சரிவு
2024 ரீவைண்ட் - தமிழகத்தை மிரட்டிய ஃபெஞ்சல் புயலும் திருவண்ணாமலை மண் சரிவும்
- தமிழ்நாட்டில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
- மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயரை தாங்கியபடி வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் இருந்து கண்ணாமூச்சி காட்டியபடியே பயணித்தது.
முதலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என நினைத்து, வலுஇழந்து, மீண்டும் உதயமாகி முன்பை காட்டிலும் வலிமையுடன் கடலில் நிலை கொண்டிருந்தது.
புயல் உருவாவதில் எப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியதோ? அதேபோல், கரையை கடப்பதிலும் தன்னுடைய ஆட்டத்தை காட்டியது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக வைத்து கடந்த நவ.30-ந்தேதி புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.
கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.
தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் 'ஃபெஞ்சல்' புயல் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக்காடானது. ஊத்தங்கரை பகுதியில் மட்டும் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் ஊத்தங்கரை நகரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.
கடலூர் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
குறிப்பாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார்கள், மினி வேன்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இதேபோல ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினார்கள்.
இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி. நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் தொங்கியவாறு நின்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை ஆஸ்பத்திரிக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு, மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர், இறந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.






