என் மலர்
Recap 2024

2024 ரீவைண்ட் - பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைதும் பின்னணியும்
- தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.
சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று கடந்த மே மாதம் 4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணை நடந்த நிலையில், நள்ளிரவு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பெண் போலீசாரை தாக்க முயன்றது, அவதூறாகப் பேசியது, தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது ஆகிய புகார்களில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல புகார்களில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமின் கேட்டு அதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் தீர்ப்பை நீதிபதி செங்கமலச்செல்வன் கடந்த 24-ந்தேதி பிறப்பித்தார். அப்போது நீதிபதி, 15 நாட்களுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.






