என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும்
- நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"சென்னை பெருநகர மாநகராட்சி சென்னைவாழ் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
44 மாத கால விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.
ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டிட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை.
- அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.
சென்னையில் கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, '300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன.
தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள்.
தெலுங்கு மக்களை நான் எதுவுமே சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?.
நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்" என கோரினார்.
இந்த வழக்கு எழும்பூர் 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில், மனுதாரர் சிங்கிள் மதர் என்றும், மனுதாரருக்கு சிறப்பு குழந்தை உள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை குடும்பம் போல் பாதுகாத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.
ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்று கூறினார்.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயல்பை விட 15 சதவீத அதிக மழைப்பொழிவு.
- தென்மேற்கு பருவமழையில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பெய்து உள்ளது.
சென்னை:
நடப்பாண்டில் பதிவான வடகிழக்கு பருவமழை விவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையின் இயல்பளவு 441.2 மில்லி மீட்டர். ஆனால் இந்தாண்டு 588.2 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
* நடப்பாண்டில் 8 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மற்ற மாவட்டங்கள், புதுவையில் கூடுதலாகவும் மழைப்பதிவு.
* வடகிழக்கு பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் கூடுதலாக மழைப்பதிவாகி உள்ளது.
* தமிழ்நாட்டில் ஜனவரி முதல் டிசம்பவர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக 1,171 மில்லி மீட்டர் மழைப்பொழிவு.
* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயல்பை விட 15 சதவீத அதிக மழைப்பொழிவு.
* அக்டோபர் மாதத்தில் 214 மில்லி மீட்டர், நவம்பர் 140 மில்லி மீட்டர், டிசம்பரில் 235 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
* தென்மேற்கு பருவமழையில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பெய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.
- இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மிகப்பெரிய வருமானமாக உள்ளது. 2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுப வர்களுக்கு ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு ரூ.630 கட்டியவர்கள் இனி ரூ.850 கட்ட வேண்டும். அதே போல ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதில் ரூ.930 கட்ட வேண்டும்.
ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், அதே போல் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும். அவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை.
இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
- மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
- இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
- போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
2024-ம் ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. இன்று நள்ளிரவு 2025 புத்தாண்டு பிறக்கிறது.
2025-ல் செல்வம், வெற்றி, திருமணம் உள்பட முக்கிய நிகழ்வுகள், பிரார்த்தனைகள் அனைத்தும் எந்தவித தடையுமின்றி நிறைவேற வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும், கனவாகவும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதன்படி இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று இரவு வழிபாட்டு தலங்களில் திரள்வார்கள் என்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு கம்புகள் கட்டி வைத்துள்ளனர்.
போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு.
- ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது.
சென்னை:
ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ரெயில்வே புதிய கால அட்டவணை சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஜனவரி 1-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜனவரி 1-ந்தேதி) முதல் அமலாக உள்ளது. இதில் புதிய ரெயில்கள், ரெயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஆகஸ்டு 31-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயான சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயில் (20627-20628), மார்ச் 12-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையே ஓடும் மைசூர் வந்தே பாரத் ரெயில் (20663-20664) உள்பட 8 புதிய ரெயில்களின் அறிமுகம் இடம் பெற்றுள்ளன.
கடந்த மே 2-ந்தேதி முதல் சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் மெமு விரைவு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு. ஜூலை 12-ந்தேதி முதல் சென்னை சென்ட்ரல் சத்யா சாய் பிரசாந்தி நிலையம்- சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (12691-12692) ஷிவி மொக்கா டவுன் வரை நீட்டிப்பு உள்பட 19 ரெயில்கள் செல்லும் வழித்தடங்களில் நகரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
சென்னை சென்ட்ரல்-மைசூரு விரைவு ரெயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரெயிலின் எண் (12610) மாற்றப்பட்டு புதிய எண் (16552) வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 14 ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. 45 ரெயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி-நிஜாமுதீன் இடையேயான வாரம் இருமுறை ஓடும் விரைவு ரெயில் (12641) உள்பட 56 அதிவிரைவு ரெயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இதுபோல 46 மெயில், விரைவு ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தொடர்பான அறிவிப்பில், 14 ரெயில்களின் எண்கள் மாற்றம் மட்டுமே புதியதாக இடம் பெற்றுள்ளது. மற்றபடி பெரும்பாலானவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, அமல்படுத்தப்பட்டவையாக உள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
- மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயரை தாங்கியபடி வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் இருந்து கண்ணாமூச்சி காட்டியபடியே பயணித்தது.
முதலில் தாழ்வுப்பகுதியாக உருவாகி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என நினைத்து, வலுஇழந்து, மீண்டும் உதயமாகி முன்பை காட்டிலும் வலிமையுடன் கடலில் நிலை கொண்டிருந்தது.
புயல் உருவாவதில் எப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியதோ? அதேபோல், கரையை கடப்பதிலும் தன்னுடைய ஆட்டத்தை காட்டியது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி, மரக்காணத்துக்கும், புதுச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக வைத்து கடந்த நவ.30-ந்தேதி புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.

கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன.
தமிழ்நாட்டில் 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் 'ஃபெஞ்சல்' புயல் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக்காடானது. ஊத்தங்கரை பகுதியில் மட்டும் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் ஊத்தங்கரை நகரை சுற்றி உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்தது.

கடலூர் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
குறிப்பாக ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரிக்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார்கள், மினி வேன்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இதேபோல ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினார்கள்.
இதேபோல் திருவண்ணாமலையிலும் பலத்த மழை பெய்தது. கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் வ.உ.சி. நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இந்த மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு குடியிருப்புகளுக்கு மேல் தொங்கியவாறு நின்றது. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே மண்சரிவால் பாதிக்கப்பட்ட வீட்டையும், மீட்புப்பணியையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவண்ணாமலை ஆஸ்பத்திரிக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு, மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த துணை முதலமைச்சர், இறந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
- ஜனவரி 3 அன்று பேரணி தொடக்கம்.
- பாஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னரை சந்தித்து பாஜ.க. மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
- போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
- அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்களை கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் த.வெ.க தலைவர் விஜய் எழுதிய நோட்டீசை அந்த கட்சியினர் மாணவ, மாணவிகளிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் தலைமையில் த.வெ.க கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க கட்சியினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த பல நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் அலை அதீத சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் உட்புகுந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றதால் மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. தற்போது நாளுக்கு நாள் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுமார் 40 அடிக்கு கடல் அலை முன்னோக்கி பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இது ஒரு புறம் இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் தேவனாம்பட்டினம் ஊருக்குள் மீன் விற்பனை செய்யும் இடம் உள்ளது. அதன் அருகாமையில் மீன் வலை பின்னும் கட்டிடமும் செயல்பட்டு வருகின்றது. தற்போது கடல் அலை அதிகளவில் சீறி பாய்ந்து வருவதால் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு வலை பின்னும் கட்டிடம் கடல் அலையில் அடித்து இழுத்து செல்லும் அவல நிலையில் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தேவனாம்பட்டினம் ஊர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.
மேலும் கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மணக்குடி பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நகைக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி பேழையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






