என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட் - தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சையும், கஸ்தூரி கைதும்!
    X

    2024 ரீவைண்ட் - தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சையும், கஸ்தூரி கைதும்!

    • நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை.
    • அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.

    சென்னையில் கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, '300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன.

    தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள்.

    தெலுங்கு மக்களை நான் எதுவுமே சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?.

    நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

    நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்" என கோரினார்.

    இந்த வழக்கு எழும்பூர் 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில், மனுதாரர் சிங்கிள் மதர் என்றும், மனுதாரருக்கு சிறப்பு குழந்தை உள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை குடும்பம் போல் பாதுகாத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.

    ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்று கூறினார்.

    Next Story
    ×