என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம், நீங்கள் கருத்து தெரிவியுங்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை:
தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சீமானுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:-
பெரியார் குறித்து சீமான் பேசியதற்கான ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். சீமான் கூறியதை பெரியார் எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை இன்று நான் வெளியிடுகிறேன். பெரியார் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது.
யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம், நீங்கள் கருத்து தெரிவியுங்கள் என மத்திய அரசு கூறியுள்ளது. துணை வேந்தர் நியமனத்தில் பேராசிரியர் அல்லாத மற்ற துறைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை பாராட்ட வேண்டும் என்றார்.
- வரும் ஆண்டில் திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும்.
- சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, (தி.மு.க.) கேளம்பாக்கம்-வண்டலூர் இணைப்பு சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என சட்ட சபையில் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் அதற்கான திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.
மாடம்பாக்கம், சிட்ல பாக்கம், குறிஞ்சி நகர் பகுதி யில் கூடுதல் வீடுகள் வந்து உள்ளதால் 3 துணை மின் நிலையங்கள் அமைத்து அதில் கூடுதல் நிருவு திறன் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது.
- அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-
காஞ்சிபுரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குடியிருப்புகள் 60 இடங்களில் மிக மோசமாக இருந்த நிலையில் அவற்றை இடித்து வீட்டுவசதி வாரியம் மூலம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வீடுகளுக்கான தேவை குறித்து தகவல் வாங்கி அவர்கள் குறிப்பிடும் பகுதியில் வீட்டு வசதி வாரியம் முலம் வீடுகள் கட்டுகிறோம்.
மேலும், கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டுவசதி வாரியம் கட்டிய வீடுகளில் விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
- அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
அப்படி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.
வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஏலத்தில் தன்னுடைய செல்ஃபோனை தானே எடுத்துள்ளார் தினேஷ். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், உண்டியலில் விழுந்த பொருட்களை சட்டப்படி ஏலத்தில் விட வேண்டும் என்ற அடிப்படையில், செல்ஃபோனை ஏலத்தில் விட்டோம். ஏலத்தில் சென்ற அந்த செல்போனை, அதன் உரிமையாளரே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
- தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
இதனால் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி பழனி கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவி மின் பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி ஜனவரி 8-ந் தேதி என அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். நேற்று மாலை வரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் இந்த பணியிடங்களுக்காக வரப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் அரசு வேலை கனவில் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் அளித்தனர்.
விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட உள்ளது. வெளிப்படையான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- மல்லிகா குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா (வயது 55) நேற்று ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரமான செய்தியை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகா உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகா குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல்:
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை, குருவாயூர்-சென்னை, கோவை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-மும்பை தாதர், நாகர்கோவில்-திருப்பதி ஆகிய ரெயில்கள் மதுரைக்கு வராமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
இதேபோல் நாளை கன்னியாகுமரி-ஹவுரா, கன்னியாகுமரி-கச்சக்குடா, சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஆகியவையும் நாளை மறுநாள் திருச்செந்தூர்-மணியாட்சி மற்றும் நாகர்கோவில்-எக்மோர் ரெயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
- சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
- ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டசபையில் உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூறியதாவது:-
சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டி.எம்.சி. ஆனால் தற்போது 15.560 டி.எம்.சி. குடிநீர் கொள்ளவு உள்ளது. எனவே போதுமான அளவுநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது.
- முதலமைச்சரின் தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும். அதற்காகத்தான் இப்படிச் செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கபூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியுமல்ல; முறையுமல்ல. இவர்களாக ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதுவும், பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் அல்லவா? வேறு எதை அது எடுத்துக்காட்டுகிறது?
மாநில அரசுகள் தங்கள் வளத்தில், பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக் கழகங்களை அபகரித்துக் கொள்கிற அக்கிரமமான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது; மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவபர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாகக் கொடுக்க முடியும்.
நியமனப் பதவிகளில் ஒருசில ஆண்டுகள் இருந்து விட்டுப் போய்விடுபவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வைப் புரிந்துகொள்ள இயலாது. (மேசையைத் தட்டும் ஒலி) மத்திய அரசு கல்வித் துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது இல்லை.
வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை என வரம்பு மீறும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு சிறு துரும்பும் கிள்ளிப் போட மறுக்கும் மத்திய அரசு. தனது நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசு; கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மத்திய பல்கலைக் கழகம் போன்ற ஒரேயொரு புதிய உயர்கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்காத மத்திய அரசு.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரது சட்டப்படியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய மத்திய அரசு. மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வது கெடுநோக்கம் கொண்டது. சுயநலமானது. நிச்சயமாக மாணவர் நலனை மனதில் கொண்டோ, கல்வித்தரத்தை மேம்படுத்தவோ இந்த முயற்சி நடைபெறவில்லை.
ஒரு தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியே பாடத்திட்டம் வகுத்துப் பட்டமும் வழங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, நூற்றாண்டு பெருமை கொண்ட கல்லூரிகளை அபகரிக்க எத்தனிப்பது அதிகார எதேச்சாதிகாரம். தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டிருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அப்படி இருக்கவும் முடியாது.
கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும் நீதி மன்றத்தையும் நாடுவோம் என்ற முன்னுரையுடன் இந்தத் தீர்மானத்தை நான் உங்கள் அனுமதியோடு முன்மொழிகிறேன்.
"பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது.
அதேபோல் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள், 2025 ஆகியன தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்விக் கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாலும், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
அதன்பிறகு இந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனி தீர்மானத்தை ஏற்க இயலாது என்று கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் முதலமைச்சரின் தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.
- இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்திவைப்பு
- மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டா டும் வகையில் ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
இதையடுத்து பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்தது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானிசாகர், அந்தியூர், பவானி, பெருந்துறை, கொடுமுடி என மாவட்ட முழுவதும் உள்ள 172 கூட்டுறவு சங்கத்தின் கீழ் 878 முழு நேர ரேசன் கடைகள், 355 பகுதிநேர கடைகள் என 1,233 ரேசன் கடைகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் முகாமில் உள்ள 1,379 குடும்பத்தினருக்கும் என மொத்தம் மாவட்ட முழுவதும் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இன்று முதல் வரும் 13-ந் தேதி வரை அந்தந்த ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று காலை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்க ப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளில் தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை பொங்கல் தொகுப்பு வாங்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
- யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
- போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.
அப்போது யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நகலை தீயிட்டு மாணவர்கள் எரித்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.






