என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளதால் இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பவில்லை.

    பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சவார்த்தை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தேசிய தலைமையிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்கலாம் என பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.

    18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும்.
    • பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க ஏதுவாக நாளை அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும்.

    தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டி உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

    அந்தந்த ஏரியாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வரும் டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வர வேண்டும் என்பதை நாள் நேரம் குறிப்பிட்டு எழுதி கொடுக்கின்றனர்.

    டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் மாதத்திற்கு இரண்டு வாரம் வெள்ளிக்கிழமையிலும், இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படாது.

    இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு ரேசன் கடைகள் நாளையும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க ஏதுவாக நாளை அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசியதை நேற்று நேரடி ஒளிபரப்பாக காட்டவில்லை.
    • சட்டமன்றம் அனைவருக்கும் பொதுவானதுதானே.

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரடி ஒளிபரப்பு தொடர்பான ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசியதை நேற்று நேரடி ஒளிபரப்பாக காட்டவில்லை. இதனால் தொகுதி மக்கள் சட்டசபைக்கு செல்லவில்லையா? என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். சட்டமன்றம் அனைவருக்கும் பொதுவானதுதானே. ஏன் இத்தகைய மாற்றத்தை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, 'திட்டமிட்டு அது போன்று செயல்படவில்லை. அதுபற்றி விசாரித்து சொல்கிறேன்' என்றார். 

    • 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்.
    • 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு.

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது, ஆலங்குளம் தொகுதி நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூலாங்குளம் காளியம்மன் கோவில் மற்றும் பாப்பாக்குடி திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோவில் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "அம்மனுக்கு ஒன்று, ஈஸ்வரனுக்கு ஒன்று, முருகனுக்கு ஒன்று இந்த மூன்று கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். அவர் கேட்ட சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் முடிவு பெற்றது. மற்ற 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என பதில் அளித்தார்.

    உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிலை பாதுகாப்பையும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கேட்ட திருமனீஸ்வரர் கோவிலில் 1942-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    தற்போது, வல்லுனர் குழு தொழில்நுட்ப குழு அனுமதி செய்யப்பட்டு 40 லட்ச ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் கேட்ட வெங்கடாஜலபதி கோவில் என்பது 1000 ஆண்டுகளுக்கு மேலான கோவிலுக்கு அரசு விடுத்த 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான பணிகள் நடைபெறும் என பதிலளித்தார்.

    மனோஜ் பாண்டியன் தொடர்ந்து பேசியதாவது, கோவிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்றி அதை டெபாசிட் செய்வதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ள தா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியதாவது:-

    தங்க நகைகளை உருக்குவதற்கான அரசாணை 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களிடம் இருந்து வரும் பயன்பாட்டு இல்லாத தங்க நகைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தார். 3 நீதிபதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் அறிவிக்கப் பட்டவுடன் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அனைத்து கோவில் வாசல்களில் அம்மன் சிலையை அமைத்து அதில் நகைகளை பறிப்பது போல் கார்ட்டூன் வைத்தார்கள்.

    நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். அதைவிடாதே பிடி என்றார். அதை பிடித்ததின் காரண மாக இன்று 1,100 கிலோ அளவிற்கு வங்கியில் வைப்பு நிதியாக தங்கம் வைக்கப்பட்டு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் கோவிலுக்கு வருமானமாக வருகிறது.

    மேலும் இந்த திட்டம் தொடரும். 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி இதுவரை யில் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள மொத்த அளவு 610 கிலோ. ஆனால் இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அளவு 1,110 கிலோ என பதில் அளித்தார்.

    • தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, "ஒரு நடிகை என்னிடம் கூறிய அந்தரங்க தகவல்களை எல்லாம் நான் கூறினால் சீமான் எவ்வளவு பெரிய காம கொடூரன் என்று சொல்லி அவர் பின்னல் நிற்கும் பெண்களே காரி துப்புவார்கள். நடிகைக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அவர் சுயநினைவு இல்லாத நேரத்தில் பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியுள்ளார்.

    சீமான் குறித்த விபரங்களை வெளியிட்டால் பெண்களே அவரை அடித்து துரத்துவர். சீமானுக்கு பெண்கள் உரிமைக்காக போராட எந்த உரிமையும் இல்லை. வதந்திகள் பரப்புவதை சீமான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது.
    • 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூா் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. மேலூர் நரசிங்கம் பட்டியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், நடைபயணமாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வெள்ளமென திரண்டு பொதுமக்கள், விவசாயிகள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    இருந்தாலும் மக்களுக்கு அச்சத்தைப் போக்குகின்ற வகையிலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிராம மக்களிடம் எடுத்து கூறி இருக்கின்றோம். நமது திராவிட மாடல் ஆட்சி ஒரு போதும் மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் வருவதற்கு அனுமதிக்காது.

    இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமன்றத்திலே நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.

    தமிழக முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் மக்களின் அச்சத்தை போக்குகின்ற வகையிலே தமிழக முதல்வரின் கருத்தை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.

    நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராமல் இருக்க அத்தனை நடவடிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.

    யார், யார் எதையெல்லாம் வந்து இங்கு சொன்னாலும் இந்த பகுதி மக்களை பாது காக்கின்ற பொறுப்பு எங்கள் கடமை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். டங்ஸ்டன் பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி, மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அ.வல்லாளப்பட்டி, கிடா ரிப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய பகு திகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து டங்ஸ்டன் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாடுகளை எடுத்து ரைத்தார்.

    இந்த பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • 11-ந்தேதி முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறையுடன் 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் நாளை (10-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 8368 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5736 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையில் அரசு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் தற்போது அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொந்த ஊர் செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் பயணிக்க முன்பதிவு செய்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் சென்னையில் இருந்து மட்டும் 80 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் பெற்றுள்ளனர். நாளை (10-ந்தேதி) பயணம் செய்ய 38 ஆயிரம் பேர், 11-ந்தேதி 41 ஆயிரம் பேர், 12-ந்தேதி 24 ஆயிரம் பேர், 13-ந்தேதி 25 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள்.

    நாளை முதல் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வரை வகுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. 11-ந்தேதி முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பஸ், ரெயில், ஆம்னி பஸ்களில் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.

    • தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    சென்னை:

    பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். கிளை தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.

    அப்போது யுஜிசி புதிய வழிகாட்டுதல் அறிவிப்பு நகலை மாணவர்கள் தீயிட்டு எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், யுஜிசியின் புதிய விதிமுறைகளை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

    • சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
    • சட்டையில் ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து நேற்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தே சட்டசபை கூட்டத்துக்கு வந்திருந்தனர். மேலும் சட்டையில் 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.

    • எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
    • யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசியதாக, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பேசியதாக, ஆதாரம் இல்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதனை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப் பூர்வமான யூடியூபிலும் பதிவு செய்தனர்.

    சீமான் கூறுவது போன்று தந்தை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை. தனது அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு தந்தை பெரியாரின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை சீமான் பேசி வருகிறார்.

    தந்தை பெரியார் குறித்து இளைஞர்கள் மத்தியில் பொய்யை பரப்பி, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்யும் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த ஆதாரம் அற்ற பேச்சினை, அவர்களது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் குரு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரவிக்குமார், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக சார்பில் நேரு தாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
    • மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கை வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

    சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது சொந்த ஊரான பாப்பாரப்பட்டியில் திருவுருவச் சிலையும், அங்கு உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்பாக குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உறுப்பினரின் கோரிக்கையின்படி, மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கை வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    ×