என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
- மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கவர்னர் நிகழ்ச்சி நடக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.
திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாம்பாக்கம், கேளம்பாக்கம், மெட்டாலா, வில்லிபாளையம், மாடம்பாக்கம் இந்திரா நகர் மாடம்பாக்கம் பிரதான சாலை, மாருதி நகர் முழுப் பகுதி, அண்ணா நகரின் ஒரு பகுதி, சுதர்சன் நகர் பகுதி, மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு, ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மென்ட், சுமேரு நகரம் மற்றும் ஸ்ரீனிவ்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எப்ஐஆர் லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு.
- NICயின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எப்ஐஆர் லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.
NICயின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை, இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய பிற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
- தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
- தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை கைது செய்த, இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கடந்த 8ம் தேதி கைது செய்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்)
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதை வெளியுறவு மந்திரி அறிவார். இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று மீனவர்களைச் சிறைபிடிப்பதால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதேபோல் சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் அமைதியை சீர் குளைக்கும் விதமாக பேசுவது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 320 கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் ஜனவரி 13ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
- காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யுஜிசி விதிகள் திருத்தம்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
துணைவேந்தர்களை ஆளுநரே நியமிக்கலாம் என யுஜிசி விதிகளை திருத்தினால், உயர்கல்வியின் நிலை என்ன ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்!
இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யுஜிசி விதிகள் திருத்தம்.
இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான் என்று அஸ்வின் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய அஸ்வின், 'ஆங்கில மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள், தமிழ் மாணவர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள்' என கேட்க தமிழ் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் 'இந்தி மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள்' என்று அஸ்வின் கேட்க மாணவர்கள் அனைவரும் அமைதியானார்கள்.
இதனையடுத்து பேசிய அஸ்வின், "இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான்" என்று தெரிவித்தார்.
இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
- ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.
இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்திநல் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதில், அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், உதவியாளராக இருந்த சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
- பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும், தமிழ்நாடு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
தமிழக மக்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்ட சமூகநீதியை பெற்றுத் தருவதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அத்தகைய போராட்டங்களின் விளைவாகவே பல்வேறு உரிமைகளை பெற்று வாழ்க்கையில் முன்னேறியிருப்பதை நன்றியுள்ள தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
அரசியலில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் மலிவான, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி ஊடக வெளிச்சம் பெற்று வருகிற சீமானை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடைமுறை சாத்தியமே இல்லாத கருத்துகளை கூறி, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிற சீமானின் அரசியலுக்கு முடிவுகட்டுகிற காலம் நெருங்கி விட்டது. எத்தனை தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் ஒரே ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் தோற்பதற்காகவே இந்தியாவில் ஒரு கட்சியை யார் நடத்துகிறார்கள் என்று தேடிப் பார்த்தால் அது சீமான் நடத்துகிற கட்சியாகத் தான் இருக்க முடியும்.
வாய்க்கு வந்தபடி அவர் உளறுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதனாலேயே தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை நடிகராக சீமான் மாறிவிட்டார். அவரை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள் முனையளவு கூட இவர் போன்றவர்களால் சிதைக்க முடியாது. எனவே, சீமானின் அருவருக்கத்தக்க பேச்சை தமிழக மக்கள் கடந்த காலங்களைப் போல, தொடர்ந்து நிராகரிப்பார்கள்.
- தனது கட்சியை சேர்ந்தவரைக் காப்பாற்ற பழனிசாமி யார் இந்த சார்? என நடத்திய கபட நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- பாலியல் குற்றவாளி "சார்களின்" சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி வந்தார் பச்சைப் பொய் பழனிசாமி.
அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார்.
அற்பத்தனமான புத்திக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அல்ல, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக 103 வது வட்டச்செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சிறுமியின் புகாரை வாங்காமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தனது கட்சியை சேர்ந்தவரைக் காப்பாற்ற பழனிசாமி யார் இந்த சார்? என நடத்திய கபட நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உண்மையை மறைக்க சிபிஐ விசாரணையை மறுப்பது போலவும் பொதுவெளியில் பிதற்றி வந்தார் பழனிசாமி. இதோ உண்மை சந்திக்கு வந்து விட்டது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மறைந்திருந்த அந்த சார் அதிமுக வட்டச் செயலாளர்தான்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி இராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளி "சார்களின்" சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது.
செப்டம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியான உறுதியான நீதியைப் பெற்றுத்தரவே சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு தடை வாங்கியது. சிபிஐ விசாரணை ஏற்படுத்தும் தாமதத்திற்கு பொள்ளாச்சி வழக்கே சான்று.
'அண்ணா, அண்ணா விட்டுடுங்க அண்ணா' என்று பொள்ளாச்சி பெண்கள் கதறிய குரலில் தமிழ்நாடே அதிர்ந்து போனது அந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தனது கள்ளக்கூட்டாளி பாஜகவோடு சேர்ந்து அதிமுக செய்த காரியங்கள்தான் இன்றும் அந்தக் கொடுமைக்கான நீதியை பெற்றுத்தர தாமதத்தை ஏற்படுத்தி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது.
இந்திய அளவில் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் முன்னணியில் இருக்கும் தனது கள்ளக்கூட்டணி பாஜகவிற்கு கொஞ்சமும் சளைத்த கட்சி அல்ல அதிமுக என்பது மற்றுமொருமுறை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நிருபிக்கப்பட்டுள்ளது.
இனியும் யார் அந்த சார்? என்று பச்சைப் பொய் பழனிசாமி கேட்க விரும்பினால் கண்ணாடியைப் பார்த்துதான் கேட்க வேண்டும்.
இன்றைக்கு காவல் ஆய்வாளரையே கைது செய்திருப்பதன் மூலம் எத்தகையும் சார்புமற்ற நேர்மையான விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்று தரும் திராவிட மாடல் அரசின் வெளிப்படையான நிர்வாகத்திறன் மக்கள் மன்றத்தில் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.
அண்ணா நகர் வழக்கானாலும் சரி, அண்ணா பல்கலைக்கழக வழக்கானாலும் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய எந்த "சாரும்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கடுமையான நடவடிக்கைக்கு தப்பிக்க முடியாது. ஆனால் அந்த சார்கள் பலரும் அதிமுகவினராக இருப்பதுதான் வெட்க கேடு.
பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவை மாற்றி அவர்களை பாதுகாத்துவரும் பழனிசாமி தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து கொண்டு இனியும் யார் அந்த சார்? என மக்களிடம் நாடகமாடினால் "யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" என மக்கள் புறக்கணித்து செல்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்தபோதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோல திசைதிருப்பல் அரசியலில் ஏன் பழனிசாமி ஈடுபடுகிறார்? எனும் சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் அது என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பழனிசாமி நடத்தும் கபடநாடகம் இனி ஒருநாளும் மக்களிடத்தில் எடுபடபோவதில்லை.
பெண்கள் மீது எந்த வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அதை திராவிட மாடல் அரசு எந்த வகையிலும் அதை சகித்துக் கொள்ளாது, அப்படிபட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்கு குற்றமிழைத்த யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க முடியாது.
- பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியீடு.
- 30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண் பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
30 வயதை தாண்டாத குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ள பெண் பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு மாத சம்பளம் ரூ.62 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு chennaimetrorail.org என்ற இணைய முகவரியில் வரும்10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 10 எனவும் தகுதியடைந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பளத்தொகை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






