என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
- கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சீமானுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
சீமானின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி சீமானுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில், சீமான் பெயரை குறிப்பிடாத எம்.பி. கனிமொழி பெரியாருக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள், அவரை எதிர்த்து, எதிர்த்து ஓய்ந்து போகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்," என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.
- பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.
- இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ந்தேதி, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. எனவே, இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன.
- தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.
சென்னை:
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித குலத்தின் சமூக விடுதலைக்கான மாபெரும் தலைவர் தந்தை பெரியார். தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை சமூகநீதிக்காகச் சளைக்காமல் பாடுபட்ட திராவிட இயக்கப் பெருந்தலைவர் அவர். தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை எவருக்கும் அஞ்சாமல் துணிந்து கூறியவர். அவருடைய பகுத்தறிவு - சுயமரியாதைச் சிந்தனைகள் சமுதாயத்தின் இருட்டை விரட்டி வெளிச்சத்தை உண்டாக்கின. தன்னுடைய கருத்துகளாகவே இருந்தாலும் அதனைக் கேட்பவர்கள் தங்களுடைய சொந்த புத்தியினால் சிந்தித்து, அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியார்.
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவருடைய கொள்கை உறுதியின் விளைவாக, தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர்.
'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என அவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார். கொள்கையில் எதிர்துருவமாக இருந்த ராஜாஜி, 'என் அன்பான எதிரி' என்று பெரியாரைப் பாராட்டினார். அவரோடு முரண்பட்டவர்களும்கூட அவருடைய தூய தொண்டினை, போராட்டக்குணத்தை, ஒளிவுமறைவின்றிக் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையைப் புகழ்ந்திடத் தவறவில்லை. "ஈ.வெ.ரா.பெரியார் இந்த மண்ணின் மணாளர்" என்று புகழ்ந்துரைத்தார் அக்கிரகாரத்து அதிசய மனிதரான வ.ரா.
உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள், தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். அவருடைய தொண்டினைப் போற்றுவார்கள். பெரியார் எந்த நேரத்தில், எந்தச் சூழலில், என்ன சொன்னார் என்று பெரியார் சொன்ன பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்துச் செயல்படுவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான். தந்தை பெரியாரின் இலட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது இரு இயக்கங்களுக்குமிடையிலான கருத்து மோதல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான், 1967-இல் பெரியாரின் வாழ்த்துகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமபங்கு கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைந்தவரும் அவர்தான். அந்தச் சட்டத்தின்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, முள்ளை அகற்றியவர் முதலமைச்சர் - கழகத் தலைவர் தளபதி அவர்கள். தந்தை பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கடைப்பிடிக்கிறது முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை 'பெரியார் மண்' என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை. பெரியார் என்ன சொன்னார், எப்போது சொன்னார் என்பது பற்றி தெரியாமலும், பெரியார் சொல்லாதவற்றையும்கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்பியும், யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன. இதற்கும் தொலைநோக்குச் சிந்தனையாளரான பெரியாரே நமக்கு வழிகாட்டுகிறார்.
"மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்" என்று 1936-ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏட்டில் பெரியார் எழுதியிருக்கிறார். அவர் சொல்லியுள்ளபடி, மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள். பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, இலட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, சமுதாயத்திற்கு விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது.
தந்தை பெரியார் புகழை நாம் என்றென்றும் போற்றுவோம். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.
- யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த விழாவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வந்தனர். வரும் வழியில் விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரத்தில் கட்சிக்கொடியை அவர்கள் ஏற்றினர். பின்னா் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விஜயகாந்த் பிறந்து வளர்ந்த ஊரான ராமானுஜபுரத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உள்ளோம். அதே இடத்தில் விஜயகாந்தின் நினைவாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க உள்ளோம்.
கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கவர்னரும், ஆளுகின்ற அரசும் இணைந்துதான் செயல்பட்டனர். தற்போது இவர்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனை. யாருக்கு அதிகாரம் என்ற போட்டிதான் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக சென்றால் நாட்டுக்கு நல்லது. இதில் இருவரும் எங்கள் பக்கம்தான் நியாயம் இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கான தீர்வை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும். வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
- நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்தது.
தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து பழைய பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.எனவே, இந்த ஆண்டும் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேட்டி சட்டை அணிந்தபடி ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
- மதுரை கிராமிய கலைகள் மையம் சார்பாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
சென்னை:
தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதற்காக ஆளுநர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய பானையில் பொங்கல் பொங்குவது போன்றும், அதன் அருகில் மாட்டு வண்டி மற்றும் வைக்கோல் போர் வைக்கப்பட்டு நமது பராம்பரியத்தை பறைசாற்றியது.
3 மண்பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேட்டி சட்டை அணிந்தபடி ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். பானையில் அரிசி, வெல்லம் போட்டு அதனை கரும்பு மூலம் கிளறி பொங்கல் வைத்தனர்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதற்காக அரங்கத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வொருவரின் இருக்கைக்கும் சென்று கையெடுத்து கும்பிட்டு பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறினார்.

அதனைத்தொடர்ந்து மதுரை கிராமிய கலைகள் மையம் சார்பாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலில் நாதஸ்வரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நாட்டுப்புற பாடல், கரகாட்டம், காளியாட்டம், பெரிய மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியாக சோழர்களின் காலத்தில் இசைக்கப்பட்ட வாத்திய கருவிகளுடன் கைலாய வாத்தியம் நடந்தது.
அதன்பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
- தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது.
- நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
சென்னை:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. பா.ஜனதாவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை பனையூரில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது புஸ்சி ஆனந்த், 'தலைவர் விஜய் கட்சியை தொடங்கும்போதே தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டார். நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான். இடைப்பட்ட காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிட போவதில்லை. மேலும் எந்த கட்சிக்கும் நம்முடைய ஆதரவு கிடையாது. நமது இலக்கு பெரிது. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் என்பதை மனதில் வைத்து கட்சி பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது.
- ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
- ஜனவரி 13-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கலுடன் இணைந்த 3 நாட்கள் விடுமுறை மட்டுமின்றி ஜனவரி 17-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்று (ஜனவரி 10) துவங்கி ஜனவரி 13-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 8 ஆயிரத்து 368 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
- இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி10-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து வந்த பலூன் பைலட்கள் மூலமாக டைகர், பேபி மான்ஸ்டர்,சீட்டா, மிக்கி மவுஸ், எலிபண்ட், உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டது.

விழாவை அமைச்சர்கள் அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்., பின்னர் பலூனில் ஏறி சில மீட்டர் துரம் பறந்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமும் மாலை 4மணி முதல் இரவு 9மணி வரை பலூன்கள் வானில் பறக்கிறது. அத்துடன் இசை கச்சேரி, உணவு திருவிழா, கண்காட்சிகளும் நடக்கிறது., நுழைவு கட்டணமாக ஆன்-லைன் மற்றும் நேரடியாக பெரியவர்களுக்கு ரூ.200ம், சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.
- ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்கள் மற்றும் பரமபத வாசல் உள்ள கோவில்களில் எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 10) அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இருபிரிவினருக்கும் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு தலா பத்து நிமிடங்கள் ஒதுக்கீடு செய்தனர்.
- எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், எந்தெந்த கோவில்களில் எல்லாம் பரமபத வாசல் உள்ளதோ அங்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
இன்று 10-1-2025 அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் ஆனது திறக்கப்பட்டது.
பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.






