என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
    • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கடந்த 6-ந்தேதி கூடியது. அன்று சபையில் கவர்னர் உரை வாசிக்கப்பட்டது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இன்று 3-வது நாளாக விவாதம் தொடர்ந்தது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கடல் மேல் பாலம் குறித்த கேள்விக்கு, சென்னை பகுதிகளில் உள்ள கடலில் பாலம் கட்ட முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

    இதையடுத்து மற்றொரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    இவ்வாறு உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்தவுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.

    • எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
    • நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் சம்பா-தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    உழவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்கள் சாகுபடி செய்த நெல்லுக்கு ஓரளவாவது நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், அவர்களிடம் மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு கேட்டு கொடுமைப்படுத்தால் நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?
    • லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

    தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.

    தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

    அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?

    சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.

    தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?

    இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

    நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம்.
    • பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஆண்டாள் தாயார் அவதரித்த இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நீராட்டு உற்சவம் பகல் பத்து என்று அழைக்கப்படும் திருமொழி திருநாளும், அதனைத்தொடர்ந்து ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாளும், முடிவில் ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவமும் நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டு மார்கழி மாத நீராட்டு உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பச்சைப் பரப்புதல் மற்றும் காலை, இரவு வேளைகளில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா, அரையர் வியாக்ஞானம், திருவாராதணம், பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதன் முடிவில் பகல் பத்து திருவிழா நிறைவு பெற்றது.

    ராப்பத்து என்று அழைக்கப்படும் திருவாய் மொழி திருநாள் இன்று (10-ந்தேதி) தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அர்ச்சர்கள் பாலாஜி பட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கிச்சப்பன், பிரசன்ன வெங்கடேஷ் அய்யங்கார், சுதர்சன், மணியார் அம்பி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் காலை 6.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதனை கடந்து வந்தனர்.

    அப்போது அவர்களுக்கு எதிரே வேதாந்த தேசிகர் ராமானுஜர், பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து நின்று மங்களாசாசனம் செய்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னார் ராப்பத்து மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு திருவாராதணம், அரையர் வியாக்ஞானம் சேவகாலம் தீர்த்த விநியோ கம் கோஷ்டி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இத னைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் தொடங்கியது.

    சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி கள் உட்பட பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல் சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்க ளும் சொர்க்கவாசலை கடந்து சென்று வழிபட்டனர்.

    • மும்பையில் கடல் மேல் அடல் சேது பாலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
    • முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கடந்த 6-ந்தேதி கூடியது. அன்று சபையில் கவர்னர் உரை வாசிக்கப்பட்டது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இன்று 3-வது நாளாக விவாதம் தொடர்ந்தது.

    சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போல தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இலங்கையில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அந்த திட்டம் இன்றுவரை கனவுத் திட்டமாகவே இருக்கிறது எனவும், கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாலம் அமைக்க இந்தியா சார்பில் முன்மொழியப்பட்ட தாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு அதே ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்த போதும் சாலை போக்குவரத்து பாலம் அமைக்க மத்திய அரசின் மூலம் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, ராமாயணத்தில் ராமர் இலங்கை பாலம் கட்டியதாக இருப்பதாகவும், மும்பையில் கடல் மேல் அடல் சேது பாலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும், சென்னையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்தார்.

    அப்போது பிச்சாண்டி கூறுகையில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரை கடல் மேல் பாலம் அமைத்தால் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் அளிக்கையில், பிச்சாண்டி நல்ல ஆலோசனை அளித்துள்ளார். மும்பையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் சென்னை பகுதிகளில் உள்ள கடலில் பாலம் கட்ட முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    • காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.


    வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 -ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.

    தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அலங்காரத்துடன் நம்பெருமாள் காட்சி அளித்தார்.


    பக்தர்கள் ரங்கா… ரங்கா… என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 

    • கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள மங்கைமடம் நெருஞ்சி கொல்லை தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 60). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ரசாயன தலைமை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவர் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர், அனைவரும் நேற்று சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 150 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை கண்ட செல்வேந்திரன் மிகுந்த வேதனை அடைந்தார்.

    பின்னர், உடனடியாக இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, விரைந்து வந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் (பொ) விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,280-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் விற்பனையாகிறது.



    கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றிமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080

    08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

    07-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    06-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    05-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    08-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    07-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    06-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    05-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    • மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி வருகிற 13-ந்தேதி அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 4.46 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆருத்ரா தரிசன வழிபாடும் 13-ந்தேதி நடைபெற உள்ளது. அப்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    பவுர்ணமி மற்றும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 முன்பதிவில்லாப் பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • 11 ஏசி வகுப்பு பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரைக்கு நாளை (சனிக்கிழமை) சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06101) மறுநாள் பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு வந்தடையும்.

    இந்த ரெயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் தலா 2 ஏசி வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    தாம்பரத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரெயில் (எண் 06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை 9.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அதே நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06067) திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள் படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 8 முன்பதிவில்லாப் பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளை சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.
    • சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்ற உள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெள்ளை சட்டையில் வந்திருந்தனர். வெள்ளை சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்ற உள்ள நிலையில் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    ×