என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
- வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பெண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த யானை திடீரென பாறை சறுக்கி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதனுடன் பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பலியான யானையுடன் மேலும் சில யானைகள் இருந்துள்ளன. யானை பள்ளத்தில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் தூரத்தில் நின்றபடி வேதனையுடன் பார்த்துள்ளன. இதனால் அந்த யானைகள் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் கடந்த 2002-ம் ஆண்டு துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது.
அப்போது எதிர்கட்சியாக இருந்த இருந்த தி.மு.க. உறுப்பினர்கள், சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆளும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை தாக்கியதாகவும், இதில் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அ.தி.மு.க. மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தற்போது அமைச்சராக இருக்கும் முன்னாள் கவுன்சிலர் மா.சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் சிலர் பிறழ் சாட்சிக ளாகவும் மாறினர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் இன்று வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
12-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11 மற்றும் 12-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
- பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.
கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.
வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.
பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.
பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம். தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்.கே.ஜி. மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 2023-24 ஆம் ஆண்டில் வணிக இணைப்புகளுக்கு மட்டும் 2.18% விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்?
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம் லாபம் ஈட்டும் நிலையை எட்டாதது ஏன்? என்ற வினா தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் எதிரொலிக்கிறது.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் வருவாய் சுமார் ரூ.54,000 கோடியாக இருந்தது. அப்போது மின்சார வாரியத்தின் இழப்பு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இருந்தது. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30% விழுக்காடுக்கு மேலாக உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி பார்த்தால் 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் ரூ.15,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டில் மின்சார வாரியம் சுமார் ரூ.10,000 கோடி இழப்பை எதிர்கொண்டது.
2023-24 ஆம் ஆண்டில் வணிக இணைப்புகளுக்கு மட்டும் 2.18% விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக அந்த ஆண்டில் மின்சார வாரியத்தின் வருவாய் ரூ.98,863 கோடியாக அதிகரித்திருந்தது. இது 2021-22 ஆம் ஆண்டின் வருவாயைவிட சுமார் ரூ.40,000 கோடி அதிகமாகும். அதனால் அந்த ஆண்டிலாவது மின்சார வாரியம் இழப்புகளை தவிர்த்து லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.4435 கோடியாக குறைந்து இருக்கிறதே தவிர, லாபம் ஈட்ட முடியவில்லை.
ஆண்டுக்காண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்படும் போதிலும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருவதற்கு காரணம், அதில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாக சீர்கேடுகளும் தான் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலான அளவு தனியாரிடமிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. இதற்காக தரப்படும் விலை தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக மின் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு ஆகும். தமிழக ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கான காரணம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே.
தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டண உயர்வு சுமத்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
- அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும்.
மதுரை:
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அரிட்டாபட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி மேலூர் பஸ் நிலையத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டங்ஸ்டன் எதிர்ப்பு தொடர்பாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேரில் சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். மீண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இத்திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்கலைகழக மானியக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளை பறிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டிருக்கிறது.
துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றுக்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரம், உரிமை இல்லை என்பது போல் கொண்டு வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றும்.
அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரமில்லாத அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. நீண்ட காலமாகவே சங்பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வருகிற சூழலில் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்துவரும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாகவும் குதர்க்க வாதமாகவும் உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு அவருக்கு எதிராக போய் முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம் இந்திய அளவில் பேசப்படுகிற மத வழி தேசியம், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பேசுகிற மதவழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாகவும் இருக்க முடியும்.
அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணியாற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கிற தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அண்ணாமலையை அவர் சார்ந்து இருக்கும் சங் பரிவார அமைப்புகள் ஆதரிக்கும். அந்த அரசியலை தான் சீமான் பேசுகிறாரா? என்பதை அவர் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தந்தை பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையின்பால் சில விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வில்லை. தொன்மை காலத்து சொற்களே உள்ளன. தமிழின் தொன்மையை பேசுவதற்காக பெரியார் அதை குறிப்பிட்டு இருக்கிறார்.
அது காலத்திற்கு ஏற்ப நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும், வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்னதை சிலர் திரித்து பேசுகின்றனர். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
- காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்குள்ள வட்டகானல் பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள்.
இங்கு நிலவும் இதமான கால நிலையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் வருகை புரியும் இவர்கள் மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கு வார வழிபாட்டில் கூடும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தாக்க திட்டமிட்டிருந்ததும், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்தாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது கொடைக்கானல் வட்ட கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால் வழக்கமாக இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு போலீசார் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
- கட்சி உட்கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனை, 105 முதல் 110 வரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். அவர், அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் முன்பு தனது பெயரில் நடத்தி வந்த மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களே கட்சியிலும் பொறுப்பாளர் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திராவிட கட்சிகளை போன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கட்டமைப்பை மாற்றும் வகையில் மாவட்ட செயலாளர் பதவியை விஜய் உருவாக்கினார். இதையடுத்து பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் சென்று மாவட்ட செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
அதன்பின்னர், தமிழக வெற்றிக்கழகம் அமைப்பு ரீதியாக 100 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள், அணிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணி வாக்கெடுப்பு மூலம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், புதிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் பெயர் பட்டியலை பார்த்து ஆராய்ந்து விஜய் ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
தவெக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள், அணித்தலைவர்கள் பங்கேற்றனர்.
விஜய் தி.நகரில் நடைபெறும் தளபதி 69 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். விஜய் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கட்சி உட்கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனை, 105 முதல் 110 வரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
- மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
- முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதனை கைவிட வேண்டும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பாதி உரையை படிக்காமல் சென்றார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறுகிறார்.
பேரவையின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு என்பது கவர்னருக்கு தெரியும். இருந்தாலும் ஏதாவது குறைகூறி சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்.
பா.ஜ.க. தலைவர்கள் தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். தேசியத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு விரோதமாகவும் செயல்படும் பா.ஜ.க. கட்சி, அதை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 13, 17-ந் தேதிகளில் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.
இதையடுத்து 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
முதல் நபராக தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
நான் இதுவரை 246 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது 247-வது தேர்தலாகும்.
நான் இதுவரை 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் என போட்டிட்டு உள்ளேன்.
வாஜ்பாய், நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, சினிமா நடிகர் சரத்குமார் என பலரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
கடைசியாக கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 286 வாக்குகள் பெற்றேன். தமிழகத்தில் கடைசியாக விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன்.
கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை போட்டிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.
இன்னும் இந்தியாவில் எத்தனை தேர்தல் வந்தாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்த லிலும் போட்டியிடுவேன்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து அதற்காக பிரசாரம் எல்லாம் செய்ய மாட்டேன். எனது நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மதியம் வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடமிருந்து, தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் படிவம், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் டெபாசிட்தொகை ஆகியவற்றை சரி பார்த்தனர்.
அதன்பின்னர், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நடைமுறைகள் முழுவதும் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.
மேலும், வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் மற்றும் வளாகம் முழுவதும், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்கு மரன், இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.
- சாதி ஒழிப்பு என்னும் இலக்கே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி ஆகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள் பெருமளவில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெரியாரின் சாதிஒழிப்புக் கருத்தியலில், சமூகநீதி அரசியலில் உடன்பாடில்லாத சனாதன சங்கப் பரிவாரங்கள் இத்தகைய பரப்புரைகளைச் செய்து வருகின்றன. அதற்கு முதன்மையான காரணம் தமிழ்நாட்டு அரசியலில் அவர்களால் காலூன்ற இயலாத இறுக்க நிலையே ஆகும்.
இம்மண்ணில் அவர்கள் வேரூன்றுவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெரியாரின் சமத்துவச் சிந்தனைகள் தான் என்பதால், பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அதனால் அவர்மீது ஆதாரமில்லாத அவதூறுகளைப் பரப்புகின்றனர். அத்துடன், பெரியாரின் கொள்கைகளைப் பேசும் இயக்கங்களைக் குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பதற்றத்தையும் குழப்பங்களையும் உருவாக்கி அதன் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சதி வேலைகளில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகின்றனர். சாதி, மதம் மற்றும் மொழி, இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனாதன சக்திகள் பேசும் பிற்போக்கு அரசியலுக்குத் துணைநிற்கும் வகையில், இவர்கள் சமூகநீதி கோட்பாட்டு அரசியலின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாருக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களின் சனாதன ஃபாசிச அரசியல் சதிகளை முறியடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்ட சனாதனப் பாசிசவாதிகள், அக்கனவு நிறைவேறாத நிலையில் தற்போதைக்குத் திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுகவைப் பலவீனப்படுத்தி, தாங்களே தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சக்தி என நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
அத்துடன், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளை எதிர்வரும் 2026-சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்கிற வெறியுடன் செயல்படுகின்றனர். ஆதலால், தமிழ்நாட்டின்மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதலை தொடுத்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியைத் தராமல் மறுப்பது; மாநில உரிமைகளைப் பறிப்பது ; ஆளுநர் மூலம் தமிழ்நாடு அரசைச் செயல்பட விடாமல் முடக்குவது போன்ற நெருக்கடிகளின் மூலம் தமிழ்நாட்டின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகின்றனர்.
அத்துடன், திராவிட அரசியல் எதிர்ப்பு சக்திகளை ஏவி, எளிய மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது, சமூகநீதி அரசியலுக்கான வாக்கு வங்கியைச் சிதறடிப்பது என தொடர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். எனினும், திராவிடக் கருத்தியலின் ஓர்மை மற்றும் சனநாயக சக்திகளின் ஒற்றுமை ஆகியவற்றின் காரணமாக சனாதனிகளின் பித்தலாட்டங்கள், சூது- சூழ்ச்சிகள் இங்கே எடுபடவில்லை.
எனவே, அந்தக் கருத்தியல் ஓர்மையையும் ஒற்றுமையையும் சிதைக்கும் நோக்கில் தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது, அதன் மூலம் பொதுமக்களிடையே பகைமூட்டிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்துவது போன்ற அரசியல் தந்திரங்களைக் கையாளுகின்றனர்.
ஆரிய சனாதனத்தின் அடிப்படையாக இருப்பது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்னும் பாகுபாடே ஆகும். அதற்கு நேர் எதிராக சமத்துவத்தை முன்மொழிந்தது தான் தந்தை பெரியாரின் சிந்தனையாகும். அதாவது, சாதி ஒழிப்பே அவரது சிந்தனைகளின் அடிப்படையாகும். சாதி ஒழிப்பு என்னும் இலக்கே தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் ஒருங்கிணைக்கும் கருத்தியல் புள்ளி ஆகும்.
அத்தகைய சாதி ஒழிப்பையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனையையும் முன்னிறுத்தி தனது இறுதிமூச்சு வரையில் தீவிரமாகக் களமாடிய தந்தை பெரியாரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருபுறம் தந்தை பெரியாரை எதிர்த்து அவதூறு செய்து கொண்டே இன்னொரு புறம் அவரைப்போலவே சனாதனத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கரையும் அயோத்திதாசப் பண்டிதரையும் மாவீரன் ரெட்டைமலை சீனிவாசனையும் தங்களுக்கானவர்கள் என தம்வயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இது எளிய மக்களை ஏமாளிகளாக்கும் சூழ்ச்சி மிகுந்த தந்திரமேயாகும். அத்துடன், சனாதன ஆதிக்கத்துக்குத் தமிழ்நாட்டின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும் துரோகமாகும்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவோம்!
சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையிலான புரட்சியாளர் அம்பேத்கர் - தந்தை பெரியார் ஆகியோரின் முற்போக்கான அரசியலை நிலைப்படுத்துவோம்! என்று தெரிவித்துள்ளார்.






