என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது
- கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
- இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி10-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து வந்த பலூன் பைலட்கள் மூலமாக டைகர், பேபி மான்ஸ்டர்,சீட்டா, மிக்கி மவுஸ், எலிபண்ட், உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டது.
விழாவை அமைச்சர்கள் அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்., பின்னர் பலூனில் ஏறி சில மீட்டர் துரம் பறந்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமும் மாலை 4மணி முதல் இரவு 9மணி வரை பலூன்கள் வானில் பறக்கிறது. அத்துடன் இசை கச்சேரி, உணவு திருவிழா, கண்காட்சிகளும் நடக்கிறது., நுழைவு கட்டணமாக ஆன்-லைன் மற்றும் நேரடியாக பெரியவர்களுக்கு ரூ.200ம், சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.






