என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
    • தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.

    சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.

    இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

    தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
    • வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    நான் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு 8-ல் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 22 ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.

    மேலும் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டர் மீது விசாகா கமிட்டி விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் எந்தவித காரணமும் இன்றி டெல்லி சிறப்பு பட்டாலியன் பிரிவிலிருந்து என்னை கடந்த 20-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (பட்டாலியனுக்கு) இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    எனது இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். மேலும் என்னை பணிமாற்றம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் இருந்து திருநெல்வேலிக்கு பணிமாற்றம் செய்தது சட்டவிரோதம். எனவே எனது பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனது உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியாலும், பழிவாங்கும் நோக்கோடும் இதுபோன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது ஏற்கத்தக்கது அல்ல, விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு எதிரானது. இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் பணியிட மாற்றம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தலைவர் டி.ஜி.பி. மற்றும் டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    • சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24-ந்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,

    25-ந்தேதி இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான 26-ந்தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் சென்றது.

    வடக்கு வாசல் முன்பு தேர் வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் சுருள் வழங்கினர். தேரோட்ட விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இழுக்கப்பட்ட தேர் மாலையில் திருநிலையை அடைந்தது.

    இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது.

    விழாவில் அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தேங்காய் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
    • தற்போது தேங்காய் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, பேராவூரணி, நாகர்கோவில், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக 15 முதல் 18 லாரிகளில் சுமார் 200 டன் அளவிற்கு தேங்காய் வரத்து இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த மாதம் முதல் தேங்காய் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து தேங்காய் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு வெறும் 70 டன் தேங்காய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தேவை அதிகரித்து தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.68 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.80வரையிலும் விற்பனை ஆகிறது.

    தேங்காய் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த மாதம் வரை பெய்த மழையால் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் பெரும்பாலும் பூச்சியின் தாக்குதலால் சேதமடைந்து உள்ளது.

    இதனால் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் இளநீருக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் இளநீர் காய்களை அதிகளவில் வெட்டி விற்பனை செய்து விட்டனர்.

    இதனால் தற்போது தேங்காய் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் 2 மாதம் வரை நீடிக்கும் என்றார்.

    • சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா.
    • சுவாமி சகஜானந்தா திருவுருவச் சிலைக்கு கவர்னர் மலரஞ்சலி.

    சிதம்பரம்:

    சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினை விடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.


    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்சர்ரி, காங்கிரஸ் கட்சி மக்கின், ஜெமினிராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    • வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பொதுப்பணி, வருவாய், நெடுஞ்சாலை, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சாலை, போக்குவரத்து, மின்சாரம், ஓய்விடம், உணவு, கழிப்பறை மற்றும் பல்வேறு வசதிகள் குறித்தும், இதுவரை செய்துள்ள வசதிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    அதன்பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, கடந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

    அதன்படி திருவிழா நடைபெறும் 10 நாட்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் செய்ய உணவுத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தது கடந்த ஆண்டு ஏற்பட்ட சில இடர்பாடுகளை முன்வைத்துதான் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு அது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனியில் செயல்படும் தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படி ஆலோசனை நடத்தி முடிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    பக்தர்களின் வருகையை பொறுத்து போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும். தைப்பூசத் திருவிழா காலங்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் 50 சென்ட் இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 1930 -ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் தெரிவித்துள்ளபடியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் நடுநிலையோடு அரசு செயல்பட்டு வருகிறது.

    கேள்விகள் கேட்பதும், அதற்கு பதில் சொல்வதும் சுலபம். ஆனால் அமைச்சர் என்ற முறையில் தான் சொல்லக்கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதனால் மத மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே பேசுகிறேன். எனவே அதே பொதுநல நோக்கத்தோடு ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, சச்சிதானந்தம் எம்.பி., அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், எஸ்.பி. பிரதீப் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது.

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    29-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    31-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    1-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    2-ந்தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிகமான மழைபெய்யக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    • பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
    • இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். இயங்கி வருகிறது.

    இந்த நிலையில், ஆலை தொடங்கும் போது சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், ஆலையின் விரிவாக்க பணிக்காக 618 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர், சாகுபடிதாரர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

    அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பனங்குடி கிராம மக்கள் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பனங்குடி சி.பி.சி.எல். குடியிருப்பு வளாகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இந்த ஆலை ஆந்திராவிற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆந்திராவிற்கு மாற்றக்கூடாது பனங்குடியிலேயே இயங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காத்​திருப்பு கட்டணம் நிமிடத்​துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும்.

    சென்னை:

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும். 3 கி.மீ.க்கு ரூ.72, 4 கி.மீ.க்கு ரூ.90, 5 கி.மீ.க்கு ரூ.108, 6 கி.மீ.க்கு ரூ.126, 7 கி.மீ.க்கு ரூ.144, 8 கி.மீ.க்கு ரூ.162, 9 கி.மீ.க்கு ரூ.180, 10 கி.மீ.க்கு ரூ.198 கட்டணம் ஆகும்.

    11 கி.மீ.க்கு ரூ.216, 12 கி.மீ.க்கு ரூ.234, 13 கி.மீ.க்கு ரூ.252, 14 கி.மீ.க்கு ரூ.270, 15 கி.மீ.க்கு ரூ.288, 16 கி.மீ.க்கு ரூ.306, 17 கி.மீ.க்கு ரூ.324, 18 கி.மீ.க்கு ரூ.342, 19 கி.மீ.க்கு ரூ.360, 20 கி.மீ.க்கு ரூ.378 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    21 கி.மீ.க்கு ரூ.396, 22 கி.மீ.க்கு ரூ.414, 23 கி.மீ.க்கு ரூ.432, 24 கி.மீ.க்கு ரூ.450, 25 கி.மீ.க்கு ரூ.468, 26 கி.மீ.க்கு ரூ.486, 27 கி.மீ.க்கு ரூ.504, 28 கி.மீ.க்கு ரூ.522, 29 கி.மீ.க்கு ரூ.540, 30 கி.மீ.க்கு ரூ.558 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    31 கி.மீ.க்கு ரூ.576, 32 கி.மீ.க்கு ரூ.594, 33 கி.மீ.க்கு ரூ.612, 34 கி.மீ.க்கு ரூ.630, 35 கி.மீ.க்கு ரூ.648, 36 கி.மீ.க்கு ரூ.666, 37 கி.மீ.க்கு ரூ.684, 38 கி.மீ.க்கு ரூ.702, 39 கி.மீ.க்கு ரூ.720, 40 கி.மீ.க்கு ரூ.738 கட்டணம் ஆகும்.

    41 கி.மீ.க்கு ரூ.756, 42 கி.மீ.க்கு ரூ.774, 43 கி.மீ.க்கு ரூ.792, 44 கி.மீ.க்கு ரூ.810, 45 கி.மீ.க்கு ரூ.828, 46 கி.மீ.க்கு ரூ.846, 47 கி.மீ.க்கு ரூ.864, 48 கி.மீ.க்கு ரூ.882, 49 கி.மீ.க்கு ரூ.900, 50 கி.மீ.க்கு ரூ.918 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    51 கி.மீ.க்கு ரூ.936, 52 கி.மீ.க்கு ரூ.954, 53 கி.மீ.க்கு ரூ.972, 54 கி.மீ.க்கு ரூ.990, 55 கி.மீ.க்கு ரூ.1,008, 56 கி.மீ.க்கு ரூ.1,026, 57 கி.மீ.க்கு ரூ.1,044, 58 கி.மீ.க்கு ரூ.1,062, 59 கி.மீ.க்கு ரூ.1,080, 60 கி.மீ.க்கு ரூ.1,098 கட்டணம் ஆகும்.

    • முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
    • மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

    கூட்டத்தில், மத்திய அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதால் கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
    • கைதானவர்களில் 2பேர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பூர்:

    காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மாணவிகளை தனிமையில் அழைத்து சென்று வன்கொடுமை செய்த மாணவர்கள் சிக்கி உள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    பெரம்பூரை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை செய்தபோது மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த எண்ணூரில் லேப் டெக்னீசியன் படித்து வரும் 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமாகி இருந்தது தெரிந்தது.

    மாணவிகள் 3 பேரையும் காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அழைத்து சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவிகளுடன் சென்ற அகரம், செங்கல்வராயனம் தெருவை சேர்ந்த ஐ.டி.ஐ. கல்லூரி மாணவர் அபிஷேக் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய 3 பள்ளி மாணவர்கள் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா, பெரம்பூரை சேர்ந்த யுகேஷ் ஆகிய 6 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    காதலில் வீழ்த்தப்பட்ட பள்ளி மாணவிகள் 3 பேரையும் காதலர்களான மாணவர்கள் வீனஸ் அருகே உள்ள அரசு நூலகத்தின் மாடியில் இரவில் தனிமையில் தங்கி இருந்தும் அங்கு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அவர்களது நண்பர்கள் ஆட்கள் வருவதை நோட்டம் பார்க்க இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இவர்களில் யுகேஷ், கலிமுல்லா ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாணவிகள் மிரட்டப்பட்டனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×