என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
    • மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    • அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
    • பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் நூற்றாண்டு பழைய ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்து 2022-ம் ஆண்டு பயணிகளுடன் பழைய ரெயில் பாலத்தில் ரெயிலை இயக்க அதன் நிர்வாகம் தடை விதித்தது.

    மேலும் ஷெர்ஜர் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக வழுவி ழந்ததால் கடந்த 2022-ம் ஆண்டு பழைய ரெயில் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி யில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இதன் காரணமாக ராமேசுரம் வரை செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாம்பன் கடலில் சுமார் ரூ.545 கோடி மதிப்பில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்டு செங்குத்து வடி வில் திறந்து மூடக்கூடிய வகையில் தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இரட்டை வழித்தட மின்சார ரெயில் பாலத்திற்கான பணிகள் தூரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு இறுதியில் நிறைவு பெற்றது. பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கு பிறகு புதிய ரெயில் பாலம் தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது.

    பிப்ரவரி மாதத்தில் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்து பயணிகளுடன் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் புதிய ரெயில் பாலம் அனைத்து சோதனை ஓட்டங்களையும் கடந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

    இந்த புதிய பாலத்தை பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பாம்பன் புதிய ரெயில் திறப்பு விழா தைப்பூச தினமான வருகிற 11-ந்தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

    அன்றைய தினம் இந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

    இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து கப்பலில் சென்றவாறு, பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார்.

    இதையடுத்து புதிய ரெயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விழாவை ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் வைத்து நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றார்.

    அந்த வகையில் இன்று காலை 11.30 மணிக்கு சோதனையின் ஒரு கட்டமாக இந்திய கடலோர காவல் படை கப்பல் ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து அந்த வழியாக கடந்து சென்றது.

    மேலும் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றாக இன்று அதிகாலையில் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் வரை பயணிகள் இன்றி என்ஜினுடன் 18 ரெயில் பெட்டிகள் இணைக் கப்பட்டு புதிய ரெயில் பாலத்தில் இயக்கப்பட்டது.

    முன்னதாக நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட விரைவு ரெயில் இன்று அதிகாலை 5 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் மண்டபம் ரெயில் நிலையத்தில் இறங்கிவிடப்பட்டு பெட்டிகள் பூட்டப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பயணிகள் இன்றி 18 பெட்டகளுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

    சுமார் 60 கி.மீ. வேகத்தில் புதிய ரெயில் பாலம் வழியாக சீறிப்பாய்ந்து 6.25 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரயில் பெட்டிகள் முழுமையாக சுத்தம் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 1 மணிக்கு மேல் மீண்டும் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம் ரெயில் நிலையம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 18 பெட்டிகளுடன் பாம்பன், தங்கச்சிமடம் ஊருக்குள் ரெயில் சத்தம் கேட்டதால் மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

    • 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது.
    • பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் புறவழிச் சாலையாக இல்லாமல் ஊரின் வழியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் விபத்துகள் நடைபெறும். எனவே சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆலம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவரும், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வினரும் சாலை மறியலில் பங்கேற்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு புறங்களிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களை கைது செய்தனர். பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் பின் போக்குவரத்து சீரானது.

    இதற்கிடையே 4 வழிச்சாலையில் அரசு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 85 பேர் மீதும், ஒரு பெண் மீதும் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • கிராமத்திலுள்ள மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தும் குளம். ஊரணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த ஆண்டுக்கான தொகை ரூ.62 கோடியே 50 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.62 கோடியை விடுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2006-2011ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவக்கப்பட்டது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தார்சாலை, குளங்கள் சீரமைப்பு, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 3 ஆண்டாக செயல்படுத்தப்படுகிறது. 2024 2025-ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,147 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆனைத்து கிராம அண்ணா மருமலர்ச்சி திட்டம்-II (AGAMT-II) விரிவான வழிகாட்டுதல்களுடன் மாநில நிதியிலிருந்து ரூ.250 கோடி உட்பட 1147.28 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில், ரூ. 62.50 கோடி முதல் தவணையாக 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆனைத்து கிராம அண்ணா மருமலர்ச்சி திட்டம்-II (AGAMT-II) செயல்படுத்த மாநில நிதியில் இருந்து தற்போதுள்ள பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் செலவில் வரையறுக்கப்பட்ட நிதி பிரிவிலிருந்து இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். பகுதிப் பணியாக இல்லாமல் முழுமையானப் பணியாக இருத்திடல் வேண்டும் என்பதை உறுதி செய்யவே குறைந்தபட்ச தொகையாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முழுமையான பணி என்பது வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால், தூர் வாருதல், குளியலுக்கான படித்துறை மற்றும் நடுப்புச் சுவர் போன்ற பணிகளின் தொகுப்பாக இருத்திடல் வேண்டும். பணிகளைத் தேர்வு செய்யவும், அதனை செய்து முடிக்கவும் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

    கிராமத்திலுள்ள மக்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தும் குளம். ஊரணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான குளம் ஊரணியைத் தேர்வு செய்யக் கூடாது. கிராமத்திற்கு தொலைவில் மற்றும் அருகில் உள்ள குளங்களுக்கு சம தகுதிகள் இருப்பின் கிராமங்களிலிருந்து தொலைவில் உள்ள குளங்களைத் தவிர்த்து, கிராமத்திற்குள் உள்ள குளத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    சில கிராம ஊராட்சிகளில் குட்டை, ஊரணி இருக்காது. அவ்வாறான இடங்களில் நிலம் இருப்பின், ஒரு புதிய குட்டை, ஊரணி அமைக்க பணி மேற்கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லையாயின், கோவில் குளங்கள், சிறுபாசனக் குளம் இருப்பின் அவற்றை எடுக்கலாம். மத்திய அரசால் நிறைவேற்றப்படும் இதர திட்டங்களைப் போல் அல்லாது, விரைந்து பணி முடிக்கவும், முழுமையாக செய்யவும், இயந்திரங்கள் பயன்படுத்துவது இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்தகைய நீர்நிலைப் பணிகள் குறிப்பிடும்படியான வடிவமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். தூர் முழுமையாக அகற்றப்படும் வரை குளங்கள் ஆழப்படுத்துதல் நடைபெற வேண்டும். குளத்தில் ஊரணியில் கணிசமான அளவு நீர் தேங்குவதை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள ஆழத்தைவிட 2 மீட்டர் ஆழப்படுத்தி, தண்ணீர் தேங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    இதற்கு மேலும் ஆழப்படுத்த வாய்ப்பு இருப்பின், குளம் அமையவிருக்கும் இடத்தைப் பொறுத்து பணி மேற்கொள்ளலாம். மழைக் காலங்களில் கரை அரிக்கப்படாமல் இருக்கவும், அகற்றப்பட்ட மண் குளத்தில் மீண்டும் சேராமல் இருக்கவும் குளத்திலிருந்து அகற்றப்பட்ட மண் குளக்கரையின் வெளிப்பகுதியில் போடப்பட்டு, இறுக்கம் செய்யப்பட வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் குட்டை மற்றும் ஊரணியில் நீளத்தில் பாதியளவு மற்றும் அகலத்தில் பாதியளவு குளங்களுக்குள் சிறுகுளங்கள் இத்திட்டத்தின் கீழ் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும். குளத்தின் அளவு மிகப் பெரியதாக இருப்பின் அங்குள்ள தேவையின் அடிப்படையில், அளவுகள் முடிவு செய்யப் படலாம். பிரதான குளத்தின் மட்டத்திற்குக் கீழ் குறைந்தது ஒரு மீட்டர் ஆழத்திற்கு சிறு குளம் தோண்டப்பட வேண்டும்.

    குளத்தில் நீர் முழுமையாக இருக்கும்போது, அகற்றப்பட்ட மண் மீண்டும் உள்ளே போகாதவாறு சிறு குளத்தின் நான்கு பக்கங்களிலும் சிமெண்ட் பூச்சு இல்லாத முண்டுக்கல் அடுக்கு முறையில் (Rough Stone Dry Packing) தடுப்பு அமைக்கப்பட வேண்டும். சிறுபாசனக் குளங்களில் சிறு குளம் அமைக்கப்படத் தேவையில்லை. குளங்களின் வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால்களில் தூர் எடுப்பதை, குளங்கள்/ ஊரணியில் தூர் எடுப்பதுடன் சேர்த்து மேற்கொள்ளலாம்.

    • கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
    • 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.

    ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.

    இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.

    அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.

    முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.

    பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு கீழ் வரவில்லை. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.60,760-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,840-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,880

    29-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,760

    28-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,080

    27-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,320

    26-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-01-2025- ஒரு கிராம் ரூ. 106

    29-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    28-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    27-01-2025- ஒரு கிராம் ரூ. 104

    26-01-2025- ஒரு கிராம் ரூ. 105

    • பேரணி பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.
    • காலை 7 மணியளவில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி பிப்.3-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற உள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதைத் தொடர்ந்து காலை 7 மணியளவில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மாவட்டக் கழகத் தோழர்களுக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் வேண்டுகோள்!

    காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் -"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் சுயமரியாதை சுடரொளி சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி -3, திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

    கழக இந்தான் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாணவர் அணி தொண்டர் அணி தொழிலாளர் அணி விவசாய அணி விவசாயத் தொழிலாளர் அணி ஆதிதிராவிடர் நல உரிமைப் பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி அயலக அணி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
    • த.வெ.க-வின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, த.வெ.க-வின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் 3ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை த.வெ.க தலைவர் விஜய் வெளியிட உள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு, சேலம், கோவை, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

    • 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம் வரை தனியாக என்ஜின் ஒன்று இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் சோதனை ஏற்பாடாக கடலோர காவல் படை கப்பல் ஒன்றை பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து இன்று (வெள்ளிக்கிழமை) கடக்க வைக்கிறார்கள். அதன்பின்னர் மீண்டும் பாலத்தை மூடி ரெயிலை இயக்கி சோதனையும் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார்.

    தொடர்ந்து கப்பலில் சென்றபடியே பழைய மற்றும் புதிய பாலங்களை பிரதமர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர், கஜபதி தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது 28). குத்துச்சண்டை வீரரான இவர், ஆண் அழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். சிறிய அளவில் குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

    இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, தனது நண்பர் அருண்குமார் என்பவருடன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, ஒரு கும்பல் தனுசை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடினார். ஆனால், அந்த கும்பல் தனுசை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த தனுஷ், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவருடன் வந்த நண்பர் அருண் குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    உயிருக்கு போராடிய தனுஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அவரது நண்பர் அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக, ஐஸ்அவுஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில், முன்விரோதம் காரணமாக தனுஷ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தனுஷ் அந்த பகுதியில் பந்தாவாக வலம் வருவாராம். தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சமீபத்தில் மரண ஊர்வலத்தில் கானா பாட்டு பாடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இனி மேல், தனுசை தீர்த்து கட்டாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய, மோகன், செந்தில் குமார், விஷால், சுரேஷ் குமார் ஆகியோர் சதி திட்டம் செய்து, தனுசை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் 4 பேரும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், சிலரை தேடி வருவதாக போலீசார் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், தனுஷை கொலை செய்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

    • நேற்று 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் காரில் வந்த இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த சம்பவத்தில் நேற்று 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அண்ணா நகர்: அண்ணா நகர் ஏ முதல் டபிள்யூ பிளாக் வரை, வஉசி நகர் பகுதி, ஷெனாய் நகர் முழு பகுதி, அமைந்தக்கரை முழு பகுதி, ஆர்.வி. நகர் முழு பகுதி, டி.பி.சத்திரம் பகுதி, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை பகுதி, பெரியகூடல் ஏஏ பிளாக் முதல் ஏஎம் பிளாக், திருவீதியம்மன் கோவில் பகுதி.

    மடிப்பாக்கம்: ராம் நகர் தெற்கு மற்றும் வடக்கு, குபேரன் நகர், எல்ஐசி நகர், ஷீலா நகர், ராமலிங்கம் நகர், சிவப்பிரகாசம் நகர், பிருந்தாவன் நகர், சதாசிவம் நகர், பெரியார் நகர், மகாலட்சுமி நகர், மடிப்பாக்கம் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, கார்த்திகேயபுரம் பகுதி, உள்ளகரம் பகுதி, ஐயப்பா நகர், கீழ்கட்டளை பகுதி, மூவரசம்பேட்டை பகுதி, லட்சுமி நகர், அன்னை தெரசா நகர், மேடவாக்கம் பிரதான சாலை பகுதி, சபரி சாலை பகுதி, பஜார் சாலை பகுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×