என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 86 பேர் மீது வழக்கு
- 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது.
- பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் புறவழிச் சாலையாக இல்லாமல் ஊரின் வழியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் விபத்துகள் நடைபெறும். எனவே சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆலம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவரும், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வினரும் சாலை மறியலில் பங்கேற்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு புறங்களிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களை கைது செய்தனர். பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் பின் போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே 4 வழிச்சாலையில் அரசு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 85 பேர் மீதும், ஒரு பெண் மீதும் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






