என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறார் நீதிமன்றத்தில் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
- 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது.
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் இரவு 8 மணி அளவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டனம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கம்பி வேலி அமைக்க பயன்படுத்தப்படும் 3 கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து என்ஜின் டிரைவர், அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் 2 கற்களில் ஏறி உடைத்துவிட்டு நின்றது.
இதையடுத்து தகவலை நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? நாசவேலைக்காக கற்களை வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது வீரபாண்டியன்பட்டினம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், வாலிபர்கள் 2 பேரும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயில் ஏறுவதை 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்ததும், அதன்படி தண்டவாளத்தில் கல் மீது ரெயில் ஏறுவதை அவர்கள் வீடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதில் 2 பேர் சிறார்கள் என்பதால் நீதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிறார் நீதிமன்றத்தில் சுமார் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்று படிப்பது, வாழ்வில் முன்னேறுவது குறித்து அறிவுரை கூறப்பட்டது. மேலும் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். அதேபோல் காட்டுபரமக்குடி கிராமத்தி னரின் பூர்வீக கோவிலாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளரான அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோவிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் நேற்று கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவேட்டை உடைய அய்யனார் கோவிலின் பரம்பரை நிர்வாகியும் தற்போது நிர்வாகியாக இருந்து வரும் பாக்கியராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவில் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி போராட்டம் செய்வதாகவும் இந்த கோவில் பிரச்சனை தொடர்பாக வருகிற 11-ந்தேதி பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்சனையை தேவை இன்றி எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
- இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
- பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 3 ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காரணமாக பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும்.
அதேபோல பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு தொடர் கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதி அளித்ததன் பேரில் இன்று மீண்டும் பள்ளி தொடங்கியுள்ளது. இதில் பலத்த போலீஸ் பாது காப்புடன் இன்று பள்ளி தொடங்கியது.
- காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
- சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, அங்கு பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
தண்டாயுதபாணி கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
- நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 700 கனஅடியாக குறைந்து வந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
- ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
06-02-2025- ஒரு கிராம் ரூ.107
05-02-2025- ஒரு கிராம் ரூ.107
- ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
- நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது.
வடலூர்:
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதில் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்த வகையில், 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில், சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
அதன்படி, நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணிக்கும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.
- அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா.
- 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.
- தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது.
- நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னர் நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை சாமி தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதனால், அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதானவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர்.
- இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்.
திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
மகனின் ரசிகர்மன்ற தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி? அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது?
வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என தெரிவித்துள்ளார்.
- தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்தமுறையும் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.






