என் மலர்
உள்ளூர் செய்திகள்
- படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம்.
- பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
மேலும் மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை மற்றும் என மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/. heetps://mtcbus.tin.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app-யில் பதிவேற்றம் செய்யலாம்.
ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.
- கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
- ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.
கரூர்:
கரூர்-திருச்சி ரெயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனை அப்பகுதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கலியமூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறுதி செய்து கொண்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் மாயனூர் ரெயில் நிலையத்திலும், கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தண்டாவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரெயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் கரூர்-திண்டுக்கல் ரெயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சதி செயல் உள்ளதா என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
- பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பெருமாள்பட்டியைச் சேர்ந்த கே. அடைக்கலம் (வயது44) என்பவர் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அடைக்கலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும் போது,
கைதான அடைக்கலம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் தங்களின் உடலை தொடுவதாகவும், மேலும் முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்றார்.
மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அன்னவாசல் அருகே அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
சென்னை:
தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,
தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கூறியுள்ளார்.
- வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.
- பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்காடு:
ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில், கடந்த சில வாரங்களாக இரவில் கடும் குளிரும், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும் காணப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலங்களில் வேலைக்கு செல்பவர்கள், எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பனி மூட்டத்தால் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏற்காடு மலைப்பாதை, அண்ணாசாலை மற்றும் மாற்றுப் பாதையான குப்பனூர் வழியாக செல்லும் மலைப்பாதையில் கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது. காலை 8.30 மணி வரை பனி மூட்டத்தால் சாலைகள் சரியாக தெரிவதில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். புயல் மழைக்கு பிறகு ஏற்காட்டில் கடும் குளிர், பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 234 ஆகும்.
- ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தி.மு.க. வசமாகி உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.) பதவி ஏற்றதன் மூலம் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களின் பலம் 134 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 234 ஆகும். இதில் சபாநாயகருடன் சேர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 133 ஆக இருந்தது. காலம் காலமாக காங்கிரஸ் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்த முறை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விட்டது.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தி.மு.க. வசமாகி உள்ளது. வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சபாநாயகருடன் சேர்த்து 134 ஆக உயர்ந்துள்ளது.
கட்சி வாரியாக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வருமாறு:-
தி.மு.க.-134, அ.தி.மு.க.-66, காங்கிரஸ்-17, பா.ம.க.-5, பா.ஜ.க.-4, விடுதலை சிறுத்தை-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2.
- தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கு விற்பனையானது
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-02-2025- ஒரு கிராம் ரூ.107
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
06-02-2025- ஒரு கிராம் ரூ.107
- முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
- 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார்.
- காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.
சென்னை:
இந்திய ரெயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரெயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.
விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி கடைசிநாளாகும்.






