என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டில், பீரோ என ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
    • நல்ல காதலர்களாக, நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களுக்கு கட்டில், பீரோ என ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், 4 கிராம் தங்க தாலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பின்போது அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

    * காதலர் தினம் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது என கூறுவார்கள்.

    * காதலை கொண்டாடாமல் இருக்க முடியுமா? ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்.

    * நல்ல காதலர்களாக, நண்பர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புதுமண தம்பதிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    • கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகை வசூல்.
    • அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வசூலிப்பதாக புகார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பைக் மற்றும் கார்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டனம் வசூலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    கோவிலுக்கு வரும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக 10 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும் வசூலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஏலம் எடுத்துள்ளவர்கள் பைக்களுக்கு வழங்க வேண்டிய டோக்கனில் உள்ள கட்டண விபரங்களை மறைத்து கூடுதலான தொகையை எவ்வித அனுமதியுமின்றி சீல் வைத்து அச்சடித்து விழா காலங்களில் வரும் பக்தர்களிடம் வசூல் செய்வதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூடுதல் கட்டண வசூலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் மீது மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    • கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் புறங்களில் திறந்தவெளிகளில் 50-க்கும் மேற்பட்ட குலதெய்வ கோவில்கள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மேற்கண்ட கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம் அருகே திரளி பகுதியில் முத்து அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகிறார்கள். திறந்தவெளியில் உள்ள இந்த கோவில் பெரும்பாலான நாட்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும்.

    காலை மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திரளி கிராமத்தை சேர்ந்த பூசாரி போதுராமன் (வயது 59) என்பவர் பூஜை செய்து விட்டு செல்வார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அறைகளில் உண்டியல்கள், விளக்குள், பூஜை சாமான்களை வைத்து பூட்டி விட்டு செல்வார்.

    கடந்த 31-ந்தேதி பூஜை செய்து விட்டு சென்ற போதுராமனால் அதன் பிறகு சொந்த வேலை காரணமாக கோவிலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    2 வாரங்களுக்கு பிறகு போதுராமன் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது வளாகத்தில் உள்ள அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 2 கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு இருந்தது. ஒரு உண்டியை உடைத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளக்கு, பூஜை தட்டு உள்ளிட்ட பித்தளை சாமான்கள் திருடுபோய் இருந்தன. திருட்டுபோன உண்டியல்களில் காணிக்கை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போதுராமன் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    முத்துஅய்யனார் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனையின் போது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 ஊசிகள் இருந்தது.
    • கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிலர் போதை ஊசி மூலம் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு அறையில் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 சிரஞ்சுகள் (ஊசிகள்) இருந்தது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 43), மதுரை சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த அசோக்(32), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜவேலு(29), திருப்பூர் வீரபாண்டி பிாிவு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பதும் இவர்கள் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 21 சிரஞ்சுகள் மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தனர்.

    விலை உயர்ந்த இந்த போதை பொருள் இவர்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது, போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.
    • இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள்

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அப்பாவி மக்கள் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் தபால்நிலையம் அருகே குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    மேலும் விசுவஇந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

    இதன் காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மட்டும் 2,400 போலீசாரும், புறநகரில் 2 ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 4,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை நகரில் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள், கமாண்டோ போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    இதுதவிர லாட்ஜ், ஓட்டல்கள், பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

    சமூக விரோதிகள் ஊடுவலை தடுக்கும் வகையில் கோவை-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் விடிய, விடிய வாகன சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

    • கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.

    பின்னர், 11 அடி அகலமும், 54 அடி நீளமும் கொண்ட குண்டம் மைதானம் தயார் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு அங்கு வாண வேடிக்கையுடன் 15 டன் விறகுகள் கொண்டு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழியில் பல்வேறு வகையான மலர்களும் தூவப்பட்டன.

    குண்டம் நிகழ்ச்சி காரணமாக கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.

    சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று நடந்தது. குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர்.

    குண்டம் இறங்க காப்பு கட்டியிருந்த பக்தர்களும் குண்டம் இறங்குவதற்கு தயாராக இருந்தனர்.

    காலை 6 மணிக்கு தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கினர்.

    அவர்களை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் என ஒவ்வொருவராக மாசாணியம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.

    ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பூ எடுத்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    குண்டம் திருவிழாவை காண கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி, கோவையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    மேலும் குண்டம் திருவிழா காரணமாக ஆனைமலையில் நேற்று மாலை முதலே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

    திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை காலை (சனிக்கிழமை) 7.30 மணிக்கு கொடி இறக்குதல், 10.30-க்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்த தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,990-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,920-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    09-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் உயர் கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் எப்போதும் வியாபாரிகள் கூட்டம் காணப்படும்.

    இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடியில் சீரமைப்பதற்கான டெண்டரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோரியுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உயர் கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    • செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
    • பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில், திராவிடர் கழக கடலூர் மாவட்டச் செயலாளர் தண்டபாணி புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு (குற்ற எண் 8/2025) செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் கடந்த 10-ந்தேதி நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்று பிப்ரவரி 14-ந்தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராவது தொடர்பான சம்மனை கொடுத்தார். வடலூர் காவல் நிலைய சம்மனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராவது தொடர்பாக சீமான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இந்த நிலையில், வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்து புகார்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுக சீமான் முடிவு செய்யதுள்ளார்.

    72 புகார்களுக்கும் நேரில் ஆஜராவதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகவும், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பை பொறுத்து ஆஜராக சீமான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    • பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • 15க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோருடன் சபரிமலை கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
    • 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ×