என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி- அண்ணாமலை பங்கேற்கிறார்
- புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.
- இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள்
கோவை:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அப்பாவி மக்கள் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் தபால்நிலையம் அருகே குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும் விசுவஇந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இதன் காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மட்டும் 2,400 போலீசாரும், புறநகரில் 2 ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 4,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை நகரில் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள், கமாண்டோ போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதுதவிர லாட்ஜ், ஓட்டல்கள், பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
சமூக விரோதிகள் ஊடுவலை தடுக்கும் வகையில் கோவை-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் விடிய, விடிய வாகன சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.






