என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் விடுதியில் போதை ஊசியுடன் 5 பேர் கைது: மெத்தபெட்டமைன் பறிமுதல்
- சோதனையின் போது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 ஊசிகள் இருந்தது.
- கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் சிலர் போதை ஊசி மூலம் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அதில் ஒரு அறையில் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் நிரப்பிய 21 சிரஞ்சுகள் (ஊசிகள்) இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 43), மதுரை சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்த அசோக்(32), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜவேலு(29), திருப்பூர் வீரபாண்டி பிாிவு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23), தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பதும் இவர்கள் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 21 சிரஞ்சுகள் மற்றும் 5 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தனர்.
விலை உயர்ந்த இந்த போதை பொருள் இவர்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது, போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






