என் மலர்
கேரளா
- உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
- இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.
உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் உம்மர்பாரூக், தனது குடும்பத்துடன் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள், தங்களுக்குள் பிரச்சனை இருக்கும் 10 சென்ட் நிலம் தொடர்பாக பேசியிருக்கின்றனர்.
இதனால் உம்மர் பாரூக் மற்றும் அவரது தங்கை கணவர் ஷேகுஞ்சி(வயது53) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களின் மகள் படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் நிலத்தை எழுதித் தர முடியாது என்று உம்மர் பாரூக் மனைவியின் தங்கை மற்றும் ஷேகுஞ்சி ஆகியோர் மறுத்துவிட்டனர்.
அதில் ஆத்திரமடைந்த உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள் ஜூமைலா, தனது தந்தையை தடுத்தார். அப்போது மாணவி ஜூமைலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.
உம்மர் பாரூக்கின் தாக்குதலில் சிக்கி கத்திக்குத்து காயமடைந்த அவரது மகள் ஜூமைலா மற்றும் மனைவியின் தங்கை கணவர் ஷேகுஞ்சி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவி ஜூமைலா பரிதாபமாக இறந்துவிட்டார். ஷேகுஞ்சிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மாணவி கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து உம்மர் பாரூக்கை கைது செய்தனர். உம்மர் பாரூக் மோதலில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தாக்குதலின் போது மகளை கவனிக்காமல் கத்தியால் குத்திவிட்டதாக தெரிகிறது.
குடும்பத்தினர் மோதலில் விலக்கிய மாணவி, பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் காசர்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
- மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.
மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- கிரிக்கெட் வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரம் வந்தனர். இந்த நிலையில் இன்று காலை இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
- நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதானத்திற்கு இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருக்கிறது.
அந்த சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்கவசம் மற்றும் சன்னிதான நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிட அனுப்பி வைக்கப்பட்டது.
பின்பு அவை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 4.54 கிலோ கிராம் தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் தங்கம் மாயமான விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவை செப்பனிட கொண்டு செல்லப்பட்ட இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிந்து கேரள தேவசம்போர்ட்டின் முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தினமும் பல புதிய தகவல்கள் கிடைத்து வந்தது மட்டுமின்றி, பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் கடந்த 19-ந்தேதி அதிரடி சோதனை நடத்தியது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 100 கிராம் தங்க கட்டி மற்றும் வழக்கு தொடரபான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்க தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்றனர்.
அவரிடம் தங்கம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணனுடனான தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. புனரமைக்க கொண்டு செல்லப்பட்டிருந்த துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் தங்கத்தகடு உள்ளிட்டவைகள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின.
ஆகவே அவரும் தங்க கொள்ளை வழக்கு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும் அவரை இந்த வழக்கில் சாட்சியாக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமுலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். அப்போது தனக்கு உன்னிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சபரிமலைக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தகடை வீட்டில் பூஜைக்காக வைத்தால் செழிப்பு ஏற்படும் என்பதால் தனது வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும், மேலும் காவலில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டதாகவும் நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை.
- கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 23-ந் தேதி கேரள மாநிலம் வந்தார். திருவனந்தபுரத்தில் நடந்த ரெயில்வே மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். கேரளா வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் விழா நடைபெற்ற புத்தேரிகண்டம் வரை பாரதிய ஜனதாவினர் வரவேற்பு பதாகைகள் அமைத்திருந்தனர்.
இந்த பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி, பா.ஜ.க. நகர தலைவருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டது.
இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் திருவனந்தபுரம் மாநகராட்சியை சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கைப்பற்றி, அந்த கட்சியை சேர்ந்தவர் மேயராக இருப்பது தான். கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வருவாய் அதிகாரியாக இருந்த ஷைனி தற்போது திடீரென வருவாய் பிரிவில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தான் பிரதமரை வரவேற்று பதாகைகள் வைத்த விவகாரத்தில் பா.ஜ.க.வினருக்கு அபராதம் விதித்தவர் என கூறப்படுகிறது. அதன் பின்னணியில் தான் இட மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
- மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
- எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்ட விரோத சங்கமாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது.
அந்த அமைப்பின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆதரவாளர்கள், தேசிய புலனாய்வு முகமையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த 6 பேர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.
திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த தலைவர், முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில் குற்றவியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் துணை அமைப்புகளுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து இவை கைப்பற்றப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பு அதன் வளாகங்கள், வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி உடற்கல்வி, யோகா பயிற்சி மற்றும் அது போன்ற செயல்பாடுகள் என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
- தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
- தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமீன் கோரி ஷிம்ஜிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
- விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன்படி, கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் உரையாற்றினார். அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
சுதாரித்துக்கொண்ட அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், மயங்கிய அமைச்சரை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டனர்.
அமைச்சருக்கு சுயநினைவு வராததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- “இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
- பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.
திருவனந்தபுரம்:
மக்களின் நலனுக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவது, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடியவர்கள் மாவட்ட கலெக்டர்கள்.
ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் படைத்த அவர்கள், சில நேரங்களில் சில விஷயங்களின் உண்மை நிலையை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஆட்டோக்களின் விதிமீறலை கண்டுபிடிக்க பெண் கலெக்டர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் களத்தில் இறங்கினார்.
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா. இவர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். எர்ணாகுளம் மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டரான அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்தே மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்த நிலையில் கொச்சி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவது அவரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அதனை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் கொச்சி மாநகர பகுதியில் சாதாரண உடையணிந்து சென்றார்.
அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து சென்ற கலெக்டர் பிரியங்கா ஒரு இடத்திற்கு சென்றதும், அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை சவாரிக்கு அழைப்பது போன்று சத்தம் போட்டு அழைத்தார்.
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரின் அருகில் சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மீட்டர் ஓடாமல் இருந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா, மீட்டர் ஓடாதா...? என்று கேட்டுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் என்பது தெரியாமல், "இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?" என்று எதிர் கேள்வி கேட்டார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்து, அந்தப் பெண் கலெக்டர் என்பதை விளக்கினர். சாதாரண பெண் என்று தான் பேசி மாட்டிக்கொண்டதை அந்த ஆட்டோவின் டிரைவர் அறிந்து என்ன செய்வதென்று விழித்தார்.
இதேபோல் கொச்சி மாநகர பகுதியில் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆட்டோக்களின் விதிமீறல்களை கலெக்டர் கண்டுபிடித்தார். அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டன.
மொத்தம் 365 ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 72 ஆட்டோக்களில் மீட்டர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக மீட்டர் பொருத்த டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
அது மட்டுமின்றி விதிகளை மீறி ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.
- பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
- பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.
கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.
இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.
இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.






