என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய புலனாய்வு முகமை"

    • பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளனா்.
    • பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    பஹல்காமில் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு அரங்கேற்றியதாக என்.ஐ.ஏ. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரை சோ்ந்த 20 போ் உதவியுள்ளனா். பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பிற பொருள்களை வழங்கியதோடு, அவா்கள் சுதந்திரமாக காஷ்மீருக்குள் நடமாட இவா்கள் பல்வேறு உதவிகளைச் செய்தனா்.

    அவா்களிடம் என்.ஐ.ஏ. விசாரித்தபோது, தாக்குதலை நேரடியாக நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தும் நேரம், ஆயுதம் குறித்து பயங்கரவாதிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2023-ல் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிசாா் அகமது என்ற ஹாஜி மற்றும் முஷ்தாக் அகமது ஆகிய இரு பயங்கரவாதிகளிடமும் என்.ஐ.ஏ. விசாரிக்கவுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ஹஷ்மி மூசா என்ற சுலைமான், அலி பாய் என்ற தல்ஹா பாய் என என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது.

    பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் 3 செயற்கைக்கோள் கைப்பேசிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திஉள்ளனா். அதில் சிக்னல் மூலம் 2 கைப்பேசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன்.

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் பேசினேன் - மஹாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர்

    கடந்த 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்த ஓவியங்களில் உள்ள ஒருவருடன் தான் ஜம்மு காஷ்மீரில் பேசியதாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஆதர்ஷ் ராவத் என்ற இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய ஆதர்ஷ் ராவத், "ஏப்ரல் 21 அன்று பஹல்காமி மேகி ஸ்டாலில் நான் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா என்று கேட்டார். உங்களை பார்த்தல் காஷ்மீரி போல தெரியவில்லையே என்று கேட்டார்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன். ஆனால் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.  

    • சம்பவ இடத்தில் முகாமிட்டு தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன.
    • தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் தகவல்களை கேட்டுப்பெற்று விசாரணை நடத்த முடிவு

    காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது.

    அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், விசா ரத்து என பல்வேறு அதிரடிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பஹல்காம் தாக்குதல் விசாரணையை ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது.

    இதனையடுத்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. மேலும், தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் தகவல்களை கேட்டுப்பெற்று விசாரணை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மும்பை 1993 வெடிகுண்டு மற்றும் 2008 தாக்குதல் சம்பவங்களில் தாவூத்திற்கு தொடர்புண்டு
    • தாவூத்தின் சகோதரி மகள், அவர் கராச்சியில் வசிப்பதை உறுதிப்படுத்தினார்

    இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா, மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம்.

    அமெரிக்கா மற்றும் இந்தியா இவரை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. "இன்டர்போல்" (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் "சிகப்பு அலர்ட்" தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் பல நாசவேலைகளை நடத்தியவர், தாவூத்.

    1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் தொடர்புடையவர்.

    இந்தியாவை விட்டு தப்பி சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்திருப்பதாக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்தது. ஆனால், 2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்கு பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதிக்கு அருகே வசிப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இந்திய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருநாட்டு உறவை குலைப்பதில் தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புகளுடன் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிகிறது.

    தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தெரிகிறது.

    • கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் இல்லங்களிலும் சோதனை தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நூபுர் சர்மா கருத்தை ஆதரித்து பதிவிட்டதால் உமேஷ் கோலேவை கொலை செய்துள்ளனர்.
    • இந்தக் கொலை வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா ஆங்கில செய்தி சேனல் ஒன்று கடந்த மே மாதம் 26-ம் தேதி நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நபிகள் நாயகம் பற்றி வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பல்வேறு போராட்டங்களுக்கும் வழி வகுத்தது.

    இதற்கிடையே, நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. கன்னையா லாலை கொலை செய்த 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த வாரம் வேதியியல் நிபுணர் உமேஷ் கோலே (54), கொல்லப்பட்ட சம்பவம் உதய்பூர் கொலையுடன் ஒத்துப்போவதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக உமேஷ் கோலே சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இவர் ஜூன் 21-ம் தேதி அவரின் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உதய்பூர் கொலை போன்று அமராவதி கொலைக்கும் ஒற்றுமை உள்ளதால் இந்த வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    ×