என் மலர்
டெல்லி
- விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது.
- 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சோ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2.24 லட்சத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 2,24,572 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்காக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் 398 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டவை.
டெல்லியில் ஒரு வழக்கின் விசாரணை முடிவடையச் சராசரியாக 4.5 ஆண்டுகள் ஆகிறது. இதுவே நாட்டின் மிக மெதுவான விகிதமாகும். திரிபுராவில் 4 ஆண்டுகளும், மணிப்பூரில் 3.7 ஆண்டுகளும், குஜராத்தில் 3.5 ஆண்டுகளும் ஆகின்றன.
இதற்கு நேர்மாறாக, புதுச்சேரியில் மிக விரைவாக வெறும் 6 மாதங்களில் விசாரணை முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சராசரியாக 257 நாட்களும், சத்தீஸ்கரில் 332.5 நாட்களும் ஆகின்றன.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இது குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகங்களில் சாட்சியம் அளிக்கச் சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், புலனாய்வுத் திறனை வலுப்படுத்தப் புதிய தடய அறிவியல் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே உள்ளது என தெரிவித்தார்.
- 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்தும் வழங்க முடியாது.
- லடாக் மாநில அந்தஸ்திற்காக போராடிய சுற்றுச்சூழல் விஞ்ஞானி சோனம் வாங்சுக் திகார் சிறையில் உள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்தோ அல்லது அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்தோ வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் லடாக்கின் முக்கிய அமைப்புகளான 'லே அபெக்ஸ் பாடி' (LAB) மற்றும் 'கார்கில் ஜனநாயக கூட்டணி' (KDA) தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தனது நிலப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
லடாக்கின் கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்க சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக பிராந்திய கவுன்சில் மாதிரியான ஒரு நிர்வாக முறையை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, லடாக் தன்னாட்சி மேம்பாட்டுக் குழுவின் (LAHDC) தலைமை நிர்வாக அதிகாரி 'முதலமைச்சர்' போலவும், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி துணை முதலமைச்சர் போலவும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தை கேலிக்கூத்து என்று கூறி LAB மற்றும் KDA அமைப்புகள் நிராகரித்துள்ளன.
மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை என்ற எங்களின் முக்கியக் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று KDA இணைத் தலைவர் அஸ்கர் அலி கார்பைல் தெரிவித்தார்.
இதற்கிடையே லடாக் மாநில அந்தஸ்திற்காக போராடிய சுற்றுச்சூழல் விஞ்ஞானி மற்றும் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் லடாகில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை, தங்கள் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்றனர்.
- குஜராத்தில் சாதி பாகுபாடு காரணமாகத் தலித் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்தார்.
நாடு முழுவதும் பணியிடங்களில் அதிகரித்து வரும் சாதி பாகுபாடு குறித்து மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கவலை தெரிவித்தார்.
நேற்று அவையில் பேசிய அவர், "ஒடிசாவில் தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை, தங்கள் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று மாதங்களாக அங்கன்வாடி மையத்தை புறக்கணித்துள்ளனர்.
21ஆம் நூற்றாண்டில் சமூக மேம்பாடு மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய பாகுபாடுகள் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியின் அடித்தளத்தையே பாதிக்கின்றன.
இது அரசியலமைப்புச் சட்டத்தின் 21A-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள கல்வி உரிமையைப் பாதிக்கும் செயல்.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம், கடந்த ஆண்டு குஜராத்தில் சாதி பாகுபாடு காரணமாகத் தலித் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போன்றவை சாதி பாகுபாடு என்பது சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், பணிபுரியும் இடங்களிலும் பரவலாக இருப்பதை காட்டுகிறது.
சரியான நேரத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற தொடர் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.
- கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ராகுல் காந்தி மக்களவையில் மேற்கோள் காட்டி பேசினார்.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே தனது புத்தகத்தில் கல்வான் தாக்குதலில் மத்திய அரசின் முடிவுகள் குறித்து எழுதிய விஷயங்கள் சர்ச்சை ஆனது.
இன்னும் வெளியிடப்படாத இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியதால் அவையில் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் புத்தகம் எழுதுவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அல்லது அதிகாரிகள் ராணுவம் தொடர்பான புத்தகங்களை எழுதுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் முறையான முன்னனுமதி பெற வேண்டும்.
புதிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது அனுமதி பெறாமல் புத்தகம் எழுதினால், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகளில் வரையறை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.
இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
- அவர் பவர் பிளே கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதனால் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
- அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி:
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜ.க. கைப்பற்றி அசத்தியது.
45 ஆண்டாக இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி முதல் முறையாக பா.ஜ.க. வசமாகியது.
இதற்கிடையே, கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரக் குழு மற்றும் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரக் குழுவிற்கு ரமேஷ் சென்னிதலா தலைவராகவும், சசி தரூர் இணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தேர்தல் அறிக்கை குழுவையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மொத்தமுள்ள 88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் அடங்கும்.
- 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது. மொத்தம் 114 விமானங்களில், 88 ஒற்றை இருக்கை கொண்டவை, 26 இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகும்.
18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த விமானங்களில் 30% முதல் 60% வரை இந்தியத் தயாரிப்பு பாகங்கள் மற்றும் ஆயுதங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரபேல் விமானங்கள் காட்டிய அபார செயல்திறன் மற்றும் சீனாவின் ஏவுகணைகளை முறியடித்த விதம் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்கும்.
மேலும், பிப்ரவரி 19-20 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வரும்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.
- பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
- பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.
இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திரா யாதவ், ஜெயா பச்சன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வின் சுதாம பிரசாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய நலனில் மத்திய அரசு சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக எழுதப்பட்ட வாசகத்தை வைத்து இருந்தனர். மேலும், பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் என்ற வாசகத்தையும் அவர்கள் கையில் வைத்து இருந்தனர்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.
- பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
- பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
- இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் குற்றச்சாட்டை பிரியங்கா காந்தி மறுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது,"சபாநாயகர் அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 எம்.பி.க்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர்.
அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இது ஒரு பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இறுதியில், நான் சில விஷயங்களை அமைதியாகச் சொன்னேன்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். ராகுல்காந்திக்கு எதிராக வழக்குகள் உள்ளிட்ட வேறு எதையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் எதுவும் ராகுல்காந்தியை பாதிக்க போவதில்லை" என்றார்.






