என் மலர்tooltip icon

    இந்தியா

    • பட்டியல் வெளியிட்டு 4 நாட்கள் ஆகியும் இதுவரை கட்சியினரிடம் இருந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக எந்த கருத்தும் வரவில்லை.
    • 1,927 தனிநபர்கள் பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் குறித்து தேர்தல் கமிஷனை அணுகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதற்கான கருத்துக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 1-ந்தேதி வரை அவகாசமும் வழங்கி இருந்தது. இந்த பட்டியல் வெளியிட்டு 4 நாட்கள் ஆகியும் இதுவரை கட்சியினரிடம் இருந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக எந்த கருத்தும் வரவில்லை என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

    அதேநேரம் 1,927 தனிநபர்கள் பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் குறித்து தேர்தல் கமிஷனை அணுகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    தேர்தல் கமிஷனின் இந்த வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் கமிஷன் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

    இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 12 ஆயிரம் கன அடியாக வந்தது. மாலையில் 9,500 கன அடியாக குறைந்தது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    • எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.

    இந்நிலையில், 'எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன.
    • வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான திருமயம் அருகே ராங்கியத்திற்கு முருகேசன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை புதுக்கோட்டை பாசில் நகருக்கு முருகேசன் தம்பதியினர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்பக்க கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன. மேலும் 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள், பணம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். தனது வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று விட்டதாக கூறி ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீட்டில் 160 பவுன் நகைகளும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனதாக போலீசாரிடம் முருகேசன் தெரிவித்தார். வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர். அதில் வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகள்கள் நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். வீட்டின் எதிர்பகுதியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முருகேசனின் வீட்டிற்குள் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சி எதுவும் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.
    • ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக வரதட்சணை மற்றும் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால் திருமணம் ஆகி 78 நாட்களே ஆன ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவில் திருமணம் ஆன 6 மாதங்களில் 24-வது பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா. இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிராம சர்வேயரான ராம் பாபுவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.

    தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராம்பாபு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். மேலும் வேறொரு பெண்ணின் முன்பு இவள் எதற்கும் லாயக்கில்லை என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா கடிதம் ஒன்றை எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், "என்னால் உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டாரும்தான் காரணம். அண்ணா... என்னால் இந்தமுறை உனக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட முடியாது" என எழுதி வைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மகள்களை கொன்று விட்டு தந்தை கோவிந்தராஜ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
    • வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டியை அடுத்த சிங்கிலியன் கோம்பை அருகே உள்ளது வேம்பாகவுண்டன்புதூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கோவிந்தராஜ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரிக் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை வைத்து அவர் வீடு கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் செய்ய முடியாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். மேலும் கடனை அடைக்க கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்திற்கு 7 மாதங்களாக தலா ரூ.27 ஆயிரம் வீதம் மாதத் தவணையை செலுத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கோவிந்தராஜ் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இங்கு வேலை இல்லாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். இதனால் மாத தவணை செலுத்துவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டார்.

    பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டினார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் திடீரென எழுந்து கதறி துடித்தனர். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டதும் படுக்கை அறையில் இருந்த பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

    இந்த நேரத்தில் கோவிந்தராஜ் துடிக்க துடிக்க 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    பாரதியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், விஷம் குடித்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பாரதி மற்றும் அவரது 1½ வயது மகனையும் அவர்கள் மீட்டனர். வீட்டின் படுக்கை அறையில் பாரதி தனது 1½ வயது மகனுடன் படுத்து தூங்கியதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் கொலை நடந்த வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார்.
    • நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்தவர் சஞ்சீவ். ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். அது தொடர்பான படங்களை வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம் பின்தொடர்பாளர்களுடன் பிரபலமாக உள்ளார்.

    இந்தநிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார். ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த காரை சாலையில் வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல் அந்த காரை பார்த்து ரசித்தனர். அப்போது அந்த கார் எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ மளமளவென கார் முழுவதும் எரிந்தது. இதனால் சாலைவாசிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். சுதாரித்து கொண்ட சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
    • தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    திருமுல்லைவாயல்: பாண்டிஸ்வரம், மாகறல், கொமக்கம்பேடு, காரணை, தாமரைபாக்கம், கொடுவேலி, வேளச்சேரி, கர்லபாக்கம், கடவூர், ஆரம்பாக்கம்.

    பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்ஆர் ராஜமாணிக்கம் சாலை, அண்ணா சாலை 7 முதல் 15-வது தெருவரை, சிக்னல் அலுவலம் ரோடு, காந்தி ரோடு, கலைஞர் ரோடு, செந்தமிர் சாலை, ஸ்ரீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர் 1 முதல் 9-வது தெருவரை, சங்கர் நகர் கிழக்கு மெயின் ரோடு, வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ECTV நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோவில் தெரு.

    பொழிச்சலூர்: திருநகர், பத்மநாப நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலணி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.

    • பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார்.
    • சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர்.

    சென்னை:

    தமிழக அரசு 'விடியல் பயண' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சாதாரண கட்டண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ''மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்சில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு, ஆண்களுக்கான டிக்கெட் தருகிறார்கள். என்ன இது?" என்று பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார். அதில், திருச்சியில் இருந்து முசிறி செல்ல ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் 2 பேருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்தனர். சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பஸ் அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பி.எஸ்.-4 புறநகர் பஸ் (நீல நிறம்). இதற்கு பயண கட்டணம் உண்டு. பஸ்சின் கண்டக்டர் மின்னணு பயணச்சீட்டில் பயணி விவரம் மகளிர் என வருவதற்கு பதிலாக, தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார் என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    ×