என் மலர்tooltip icon

    இந்தியா

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல- சட்டசபையில் அமைச்சர் பேச்சு.
    • நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம்" என்று கூறினார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா "நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்" என என பதில் அளித்தார்.

    ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதைத்தான் செய்தோம். தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    இன்றைய சட்டசபை நிகழ்வில் பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் "எனக்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்களில் சைகளை பார்த்துதான் சபாநாயகர் செயல்படுகிறார்.

    நடுநிலையாக இல்லை. அவர் ஆசிரியராக இருந்தவர். நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உபத்ரவம் கூட கொடுக்காமல் இருக்கலாம். அதை செய்யல.

    இன்னும் என்னை தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகள் ஒரு திட்டத்தை சொன்னால் நேரில் சென்று பார்க்கிறார்கள். அதைபோன்று எங்களது மாவட்ட ஆட்சியாளர்கள், முதன்மை பொறியாளர் எங்களை அழைத்துச் சென்றார்கள். மக்களின் பிரச்சனைக்காக நான் சென்ற கலந்து இருக்கிறேன். அதுக்கு என்னங்க... இன்னும் ஓட்டிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்றார்.

    • இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
    • பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்றபோது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

    அதேபோன்று ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

    மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.

    இவ்வாறு சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    • இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
    • பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:

    வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

    நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.

    நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

    அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.

    அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.

    கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

    • இளையராஜா சிம்பொனி இசைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் பிரதமர்.
    • பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாதது என தெரிவித்தார் இளையராஜா.

    புதுடெல்லி:

    இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா இன்று சந்தித்தார். அவரிடம் சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.

    இந்நிலையில், இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன் வாலியன்ட் என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசுகையில் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.

    • தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    • கேரள மாநில முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்கின்றனர்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

    • இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
    • பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

    கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
    • அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

    ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.

    நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.

    என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.

    • சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

    மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
    • 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.

    இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.

    மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.

    இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.

    • காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
    • திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • வேலை நாட்கள் எண்ணிக்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசியதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்

    ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    ×