என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார்.
    • கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு- காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பிரதமர் மோடி இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

    கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாரமுல்லா இடையே முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படலாம் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநில முதல்- மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    பின்னர் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார். கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

    • தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
    • ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    சட்டசபையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா புதுச்சேரி சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார்.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக தேக்கத்தை சரி செய்வதற்கு மாநில அந்தஸ்து தேவை என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    • புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.

    நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.

    நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.

    • சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
    • நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.

    நடிகரும், டைரக்டருமான பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

    எம்புரான் படம் வெற்றி பெறவேண்டி சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவர் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மம்முட்டிக்காக மோகன்லால் வழிபடு நடத்தியது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் பாராட்டினார்.

    அதே சமயம் மம்முட்டி ஒரு முஸ்லிம் என்றும் இந்து முறைப்படி அவருக்கு பிரார்த்தனை செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று மற்றொரு தரப்பினர் இதற்கு தெரிவித்துள்ளனர்.

    இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர் அல்லாவிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மோகன்லாலிடம் மம்முட்டி கூறியிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று 'மத்யமம்' செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரான அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள்.

    சென்னை:

    மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்திய நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இத்தகைய உணர்வைக் கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசானது, தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாகச் செய்து வருகிறது. எதைச் செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

    குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இசுலாமிய மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது.

    சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களைப் பாதிப்பதாக அமைந்திருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இசுலாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

    எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்பு சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும்.

    அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.

    ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.

    இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

    மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.

    வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்பு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.

    வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்ட மிட்டுள்ளார்கள். நீண்ட காலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.

    லிமிட்டேஷன் ஆக்ட் என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்பு என கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

    இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இசுலாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது.

    இதனை பாராளுமன்றக் கூட்டுக் குழுவிடம் 30.9.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்ற தி.மு.க. உறுப்பினர்களான முன்னாள் அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் கடுமையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை பாராளுமன்றக் கூட்டுக் குழு நிராகரித்து இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்த நிலையில் வக்பு திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இசுலாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று நான் கருதுகிறேன்.

    சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன.

    இந்தத் திருத்தச் சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    மதநல்லிணக்கம்-அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கூறிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.

    ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்து அமைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதையடுத்து அரசின் தனித் தீரமானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மத்திய அரசை எதிர்த்து கொண்டு வரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
    • வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.

    தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

    இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

    அடுத்த முறை டெல்லி செல்லும்போது வக்பு வாரிய திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துங்கள் என்று கூறினார்.

    வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

    • மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
    • தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

    மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    • கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.
    • இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது.

    கடந்த 2017-ல் இங்கு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து பலரிடமும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சுதாகரன் விசாரணைக்கு ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு காரில் வந்தார்.

    பின்னர் அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்குள் சென்றார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடநாட்டின் முன்னாள் பங்குதாரர் என்பதால், பங்களாவில் என்னென்ன இருந்தது. கொடநாடு பங்களாவில் கொள்ளை போனது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளையும் கேட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் தனக்கு தெரிந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    * சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.

    * பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.

    * காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    * மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    * ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
    • கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளன.

    ஆளும் தி.மு.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யும் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நிலையில் பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்த பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை லட்சக்கணக் கான மக்களை திண்ணை பிரசாரம் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

    நாளை (வெள்ளிக்கி ழமை) 7-வது வாரமாக திண்ணை பிரசாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து பேச அ.தி.மு.க. இளம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த திண்ணை பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
    • காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.

    * அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.

    * குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.

    * தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன.
    • புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

    இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


    உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×