என் மலர்
இந்தியா
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
- கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி இணையாக சாமி தரிசனம் செய்யயும் வகையில் மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி, இரண்டாம் கட்டமாக பக்தர்கள் காத்திருக்கும் அறை, அலுவலக கட்டிடம் கலையரங்கம் என முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
அடுத்த கட்டமாக கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் தற்போது பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் நாழிக்கிணறு வாகன நிறுத்தம் தற்காலிகமாக நாளை 31-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் வாகனங்கள் டி.பி. ரோட்டில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியாலும் பக்தர்கள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகிலும், தாலுகா அலுவலகம் அருகிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நகர எல்லைக்குள் வாகன நெருக்கடி காணப்பட்டது.
- விமான நிலைய பணியாளர்கள் காத்திருந்தனர்.
- விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.
டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கிய பின் விமானத்தின் டயர்களை பரிசோதனை செய்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
- டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவமழையின் போது மழை கைகொடுத்ததால் அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று முற்றிலும் நின்று விட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் 57.71 அடியாக குறைந்துள்ளது. அணையில் முறைநீர் பாசன அடிப்படையில் தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி குடிநீருடன் சேர்த்து 722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3178 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1392 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. மழை எங்கும் இல்லை.
- யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடைசியாக கடந்த 18.3.2013 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது.
நாளை (31-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
அன்று முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்தல், மூலாலயத்தில் இருந்து யாகாலயத்துக்கு திருக்குடங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடக்கின்றன.
2-ந் தேதி காலை 2-ம் கால யாக வேள்வி, மாலை 3-ம் கால யாகவேள்வி, 3-ந் தேதி காலை 4-ம் காலயாக வேள்வி, மாலை 5-ம் கால யாகவேள்வி, 4-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
காலை 9.05 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ராஜகோபுரத்தின் மீது 8 அடி உயரம், 6 அடி அகலத்தில் ஓம் என்ற எழுத்தும், அதன் மீது 24 அடி உயரம், 8 அடி அகலத்தில் வேல் வடிவமும் எல்.இ.டி.யால் தயாரித்து பொருத்தப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகிறார்கள். அதிகாரிகள் கூறுகையில் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளின் மண்டபங்கள் மீது சுமார் 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நின்று கும்பாபிஷேகம் காண 1,500 பேரும் அனுமதிக்கப்படுவர்.
மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. யாக சாலை பூஜைகள் 50 சதவீதம் தமிழ் மொழியிலும், 50 சதவீதம் வழக்கமான முறையிலும் நடத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக படியில் மண்டபம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- ஒருவரது நடவடிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
- பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிளஸ்-1 வகுப்புக்கான மேம்பாட்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. நாதாபுரத்தில் உள்ள கடமேரி ஆர்.ஏ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் ஏராளமானோர் தேர்வு எழுதினர்.
அதில் ஒருவரது நடவடிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் அவரது விவரத்தை சரிபார்த்தார். இதில் சந்தேகம் மேலும் அதிகமானதால் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்குரியவர், ஆள்மாறாட்டம் செய்து தனது நண்பருக்காக தேர்வு எழுதுவது தெரியவந்தது. அவரது பெயர் இஸ்மாயில். கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் தோல்வி பயத்தில் இருந்ததால் அவருக்காக தேர்வு எழுத வந்ததாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயிலை கைது செய்தனர்.
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.
42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.
சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
- ஏப்ரல் 6 ஆம் தேதி உ.பி. முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை
- அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரிக்கை
உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் உத்தரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது.
மேலும், ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது உ.பி. மாநகராட்சி சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரித்துள்ளது.
- மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர்.
- பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.
உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.
இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. .
இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
- இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
- ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை:
மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று பிரேசில் லெஜண்ட்ஸ்-இந்திய லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும்.
கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான கியூ ஆர்-கோர்டு குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் 'ஸ்கேன்' செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
- திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.
விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-
* திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.
* தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.
* தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
* விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
- வேலூரில் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
- 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.
சென்னையில் இன்று 100 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் நேற்று 104 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
மதுரை நகர் பகுதியிலும், ஈரோட்டிலும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்திலும், வேலூரிலும் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
தருமபுரி, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவானது. கோவை மற்றும் திருத்தணியிலும் 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 செல்ஷியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.






