என் மலர்
ஆசிரியர் தேர்வு
- தங்கம் விலை காலை, மாலை என இரு வேளையும் உயர்ந்து வருகிறது.
- காலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது.
- இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என கட்டளை பிறப்பித்துள்ளார். இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், 'ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை தன்னுடைய அனுமதியின்றி எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது. யாரிடமும் வழங்கக்கூடாது என்று தலைவர் மொசின் நக்வி தெளிவாக தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை தனது கையால் வழங்க வேண்டும் என்பதில் மொசின் நக்வியும், அவரிடம் இருந்து வாங்கக்கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் பிடிவாதமாக இருப்பதால் ஆசிய கோப்பை விவகாரத்தில் இப்போதைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை' என்றனர்.
- 2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது.
- தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 187 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
- ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் உள்ளது
- சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில், நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
- டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டார்.
- அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.
புதுடெல்லி:
உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகை தீபிகா படுகோனை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.
மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், மனநல தூதராக தீபிகா நியமனம் செய்யப்பட்டிருப்பது, நமது நாட்டில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். பொது சுகாதாரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்த உதவிசெய்யும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மனநல தினத்தன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் மிகவும் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்கீழ் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.
அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.
- சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
- என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.
- ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
- சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.
மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
- உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்ப விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு விதாங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. அத்துடன், பிரமாணப் பத்திரத்தை பார்த்த பின்னர்தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனடிப்படையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.






