என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணிக்கு எனது அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது - மொசின் நக்வி பிடிவாதம்
    X

    இந்திய அணிக்கு எனது அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது - மொசின் நக்வி பிடிவாதம்

    • ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது.
    • இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

    துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என கட்டளை பிறப்பித்துள்ளார். இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், 'ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை தன்னுடைய அனுமதியின்றி எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது. யாரிடமும் வழங்கக்கூடாது என்று தலைவர் மொசின் நக்வி தெளிவாக தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை தனது கையால் வழங்க வேண்டும் என்பதில் மொசின் நக்வியும், அவரிடம் இருந்து வாங்கக்கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் பிடிவாதமாக இருப்பதால் ஆசிய கோப்பை விவகாரத்தில் இப்போதைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை' என்றனர்.

    Next Story
    ×