என் மலர்
ஆசிரியர் தேர்வு
- சிறுவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
- மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
'போக்சோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமின் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சிறுவனுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு 9-ம் வகுப்பில் இருந்து இல்லாமல், மிக இளம் வயதில் இருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான், பருவம் வந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து இளம் பருவத்தினர் தெரிந்து கொள்ள முடியும். அதுதொடர்பாக செலுத்த வேண்டிய கவனமும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கையும் தெரிய வரும். உரிய அதிகாரிகள், இதில் தங்களது மனதை செலுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
- மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இவை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின.
இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்.
அதுவரை தென் இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.
- வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
- தீர்ப்பு வழங்கியதும் அங்கிருந்த குற்றவாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
டிரானா:
அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு கோர்ட் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார்.
அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.
இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து இறந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, கோர்ட் பாதுகாப்பு அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சம்சோனோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- டார்ஜிலிங்கில் கடந்த வாரம் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் இர்பானால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து இர்பான் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விசாகப்பட்டினம்:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் 102 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். பிரதிகா ராவல் 34 ரன்னும், ஸ்நே ரானா 33 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சோ ட்ரியான் 3 விக்கெட்டும், காப், கிளர்க், எம்லாபா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 70 ரன்கள் எடுத்தார். சோ ட்ரியான் 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
8வது வீராங்கனையாக களமிறங்கிய டி கிளெர்க் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின் அதிரடியில் இறங்கினார். அவர் 54 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 48.5 ஓவரில் 252 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட், ஸ்நே ரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.
ராட்சசன் வரிசையில், ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் தான் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும், இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அதற்கு ஏற்றார்போல் இந்தப்படம் அமைந்துள்ளது. நிச்சயமாக ராட்சசன் போன்று இருக்காது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. கட்டா குஸ்தி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும், பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.
வெப் சீரிஸ் தொடர்பான பணிகளுக்காக நானும் ஆர்யன் படத்தின் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தோம். அப்போது நடிகர் அமீர் கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பொதுவாக பேசும் போது, இந்தப் படத்தின் கதையை கேட்பதாக சொன்னார்.
அதன்படி ஒருநாள் இரவு 10 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து, மறுநாள் காலை 6 மணி வரை ஆர்யன் படம் மட்டுமின்றி பொதுவில் சினிமா தொடர்பான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் தான், வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.
அமீர்கான் நடிப்பதாக தெரிவித்த கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் இந்தப் படத்தை தொடங்கும் போதே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
எனக்கு பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்ததாகவும், அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. இந்தப் படம் முற்றிலும் வேறானது. இந்தப் படம் அதிக மொழிகளில் வெளியாகி, சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவில் இரு மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
- காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது.
- 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க. தலைவர் ஒருவர் (அமித் ஷா), வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்பதைச் சொல்வதற்காக மேற்கு வங்கம் வந்தார்.
மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில், புதிய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா?
இவை எல்லாம் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார். பிரதமர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனினும், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்.
அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மீர் ஜாபரைப் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. எனது வாழ்க்கையில் பல அரசாங்கங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்தார்.
மீர் ஜாபர் 18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.






