என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

20 குழந்தைகள் பலி- இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






