செய்திகள்

இந்தியா உடன் பேச அமெரிக்காவின் உதவியை நாடிய பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

Published On 2018-10-04 10:11 GMT   |   Update On 2018-10-04 10:11 GMT
இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த உதவி செய்யுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #IndPakTalks #US
வாஷிங்டன்:

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்ற இந்தியா, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச ஒத்துக்கொண்டது.

ஆனால், அதற்கு அடுத்த நாளே காஷ்மீரில் மூன்று போலீசார் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டனர். இதனால், பாகிஸ்தான் உடன் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

இதனால், பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இதனால், பாகிஸ்தான் சற்றே அதிர்ச்சியடைந்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. 

பேச்சுவார்த்தையின் போது, இந்தியா உடன் சமரசம் செய்து வைத்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க உதவ வேண்டும் என குரேஷி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குரேஷியின் இந்த கோரிக்கையை அமெரிக்கா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாம் நாடுகள் தலையீடு தேவையில்லை என இந்தியா பல முறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News