செய்திகள்

அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி - டிரம்ப் இரங்கல்

Published On 2018-04-04 23:40 GMT   |   Update On 2018-04-05 00:35 GMT
அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான வீரர்களின் குடும்பத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாக்ரமென்டோ:

அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று, அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில், சற்றும் எதிர்பாராத நிலையில் எல் சாண்ட்ரோ அருகேயுள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடம் சாண்டீகோ நகரில் இருந்து 161 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர் என நம்பப்படுவதாக கடற்படை செய்தி தொடர்பாளர் கூறினார். விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டர், ‘சிஎச்-இ சூப்பர் ஸ்டாலியன்’ ரகத்தை சேர்ந்தது ஆகும். அமெரிக்க பாதுகாப்பு படையில் உள்ள மிக நீளமான, அதிக எடை சுமக்கக்கூடிய ஹெலிகாப்டர் இதுதான் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 வீரர்கள் பலியானதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். #Tamilnews
Tags:    

Similar News