இந்தியா

நாங்கள் ஏற்கனவே 310 இடங்களை தாண்டிவிட்டோம்: அமித் ஷா

Published On 2024-05-23 11:37 GMT   |   Update On 2024-05-23 11:37 GMT
  • அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.
  • காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. ஏறக்குறைய 440 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பேசினார்.

அப்போது அமித் ஷா கூறியதாவது:-

முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்பட்டுவிட்டது. இந்த முறை காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது என்பதை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.

லாலு பிரசாத் யாதவ் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். உத்தவ் தாக்கரே அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். சரத் பவார் அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். ஸ்டாலின் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார்.

மம்தா அவரது மருமகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா காந்தி அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். தனது குடும்பத்தினருக்காக வேலை செய்யும் ஒருவரால் நாட்டிற்காக பணி புரிய முடியாது.

பாகிஸ்தான் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களுடையது எனச் சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அணுகுண்டை பார்த்து பயப்படமாட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதை திரும்பப் பெறுவோம்.

மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், விடுமுறை சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு செல்ல ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் டிக்கெட் புக் செய்துள்ளனர். ராகுல் காந்தி இத்தாலி, தாய்லாந்து, பாங்காங் புறப்படுவார். நரேந்திர மோடி 23 வருடங்களாக விடுமுறை எடுத்தது கிடையாது. தீபாவளியை விடுமுறையைக் கூட எல்லையில் உள்ள வீரர்களுடன் செலவிட்டார்.

இந்த தேர்தல் ராமர் கோவிலை கட்டியவர்களுக்கும், ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும் இடையிலானது.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Tags:    

Similar News