செய்திகள்

ஊழல் புகாரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மீது விசாரணை? - பதவி விலக நெருக்கடி

Published On 2018-02-14 09:19 GMT   |   Update On 2018-02-14 09:19 GMT
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக போலீசார் நேற்று தெரிவித்ததை அடுத்து, அவர் பதவி விலக அழுத்தம் அதிகரித்துள்ளது. #BenjaminNetanyahu
டெல் அவிவ்:

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர். விசாரணையின் அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்கிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #BenjaminNetanyahu #Isreal #TamilNews
Tags:    

Similar News