search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி விலகல்"

    பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    லண்டன்:

    2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.



    இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே ஏற்கனவே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், மூத்த மந்திரி பதவி விலகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக இருந்து வந்தார்.



    இந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளார்.

    இது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.

    இருப்பினும் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்து, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இதே பரிந்துரையை அந்த நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் வான் டிர் பெல்லனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், “முடிந்த வரையில் வெகு விரைவாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் அதிபரிடம் பரிந்துரை செய்து இருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போதும் என்று நேர்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதை வீடியோ காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதை அதிபர் அலெக்சாண்டரும் உறுதி செய்து கூறும்போது, “துணைப்பிரதமர் பதவி விலகி விட்டதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் தேவைப்படுகிறது. பிரதமர் செபாஸ்டியன் குர்ஸிடம் விவாதித்து முடிவு எடுப்பேன்” என குறிப்பிட்டார். பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சூடானில் ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகினார். அங்கு மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் குழப்பம் நிலவுகிறது. #Sudan #OmaralBashir #AwadIbnAuf
    கார்டோம்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவி வகித்து வந்தவர், உமர் அல் பஷீர் (வயது 75).

    இவர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அவர் பதவி விலகக்கோரி அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன.

    சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் ராணுவ மந்திரியாக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11-ந்தேதி ராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆட்சியை கவிழ்த்த சூட்டோடு சூடாக அவாத் இப்ன் ஆப், ராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் ராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார்.

    இவர் உள்நாட்டுப்போரின்போது, ராணுவ உளவுத்துறை தலைவர் பதவியும் வகித்தவர் ஆவார். இதையொட்டி அவர் மீது 2007-ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

    ஆட்சியை கவிழ்த்த நிலையில், சர்வதேச கோர்ட்டில் வழக்கு இருந்தாலும், உமர் அல் பஷீர் நாடு கடத்தப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

    அத்துடன் 2 ஆண்டுகள் ராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர்தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பெருமளவில் போராட்டங்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

    அடுத்த திருப்பமாக ராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகி விட்டார். இதை அவரே அரசு டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.

    ராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறினார்.

    ஆனால் மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறவர்கள் கூறுகின்றனர். போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

    இதன் காரணமாக சூடானில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.  #Sudan #OmaralBashir #AwadIbnAuf
    இங்கிலாந்தை சேர்ந்த நடிகையுடன் உறவு வைத்துக்கொண்டதாக தொடர்பாக வார்னர் நிறுவன தலைவர் கெவின் டுசுஜிஹாரா தனது பொறுப்பில் இருந்து விலகினார். #WarnerCEO #KevinTsujihara
    நியூயார்க்:

    ஹாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனம் ‘வார்னர் பிரதர்ஸ்’. “சூப்பர் மேன், பேட் மேன், ஹாரிபாட்டர்” உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களை இந்நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

    இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கெவின் டுசுஜிஹாரா. இவர் தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் வாய்ப்பு வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி, இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட்டே கிரிக் என்ற நடிகையுடன் உறவு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து இந்த புகார் தொடர்பாக ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில் கெவின் திடீரென தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனை ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார். #PMK #ActorRanjith

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.

    கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

    மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

    நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம்? அன்புமணி எப்படி மக்களிடம் சென்று வாக்குகள் சேகரிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார். #PMK #ActorRanjith
    மத்திய அரசுடன் மோதல் நீடித்து வருவதால், ரிசர்வ் வங்கி கவர்னர் 19-ந் தேதி ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. #RBIGovernor #UrjitPatel #Resign
    புதுடெல்லி :

    ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது.

    அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை.

    இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.

    கடந்த மாதம் 26-ந் தேதி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா, இந்த பூசலை வெளிப்படுத்தினார். “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத அரசு, கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.



    இதையடுத்து, ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வருகிற 19-ந் தேதி பதவி விலகக்கூடும் என்று ‘மணிலைப்’ என்ற ஆன்லைன் பொருளாதார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி, இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    அந்த வட்டாரங்கள், “மத்திய அரசுடனான மோதலால் உர்ஜித் படேல் சோர்வு அடைந்ததுடன், அவரது உடல்நிலையையும் அது பாதித்துள்ளது. எனவே, இந்த மோதல் மேலும் அதிகரித்தால், ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் 19-ந் தேதி நடைபெறும்போது அவர் பதவி விலகுவார்” என்று கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RBIGovernor #UrjitPatel #Resign 
    மத்திய அரசுடனான மோதல் போக்கினால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #RBIGovernor #UrjitPatel #Resign
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த வாரம் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் வி. ஆச்சார்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு விளையாட நினைத்தால், அது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதற்கு பதிலடி தருகிற வகையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். அப்போது அவர், ரிசர்வ் வங்கியை கடுமையாக சாடினார்.

    குறிப்பாக, “2008-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையில் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு வங்கிகள் கண்மூடித்தனமாக கடன் களை வழங்குமாறு (ரிசர்வ் வங்கியால்) கூறப்பட்டன. அப்போதைய மத்திய அரசு மற்றொரு பக்கம், வங்கிகள் இன்னொரு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் இருந்த ரிசர்வ் வங்கி அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது? அவர்கள் உண்மையை கம்பளியின் கீழ் வைத்து மறைத்து விட்டார்கள்” என்று சாடினார்.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சட்டப்பிரிவானது, பொது நலனை கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, உத்தரவுகளை பிறப்பிக்க வழி வகுத்துள்ளது.

    இப்படி மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்தால், அதை ஏற்று செயல்படுத்துவதை விட ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவு எடுத்து விடுவார் என தகவல்கள் கூறுகின்றன.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர், “தகவல்கள் வெளியானபடி, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, இதுவரை இல்லாத வகையில் சில உத்தரவுகளை ரிசர்வ் வங்கிக்கு பிறப்பித்துள்ளது. இன்று (நேற்று) இன்னும் சில மோசமான செய்திகள் வரக்கூடும் என பயப்படுகிறேன். 1991 அல்லது 1997 அல்லது 2008 அல்லது 2013 ஆண்டுகளில் நாங்கள் ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது அதை பயன்படுத்த என்ன அவசியம் ஏற்பட்டது? பொருளாதாரம் பற்றி உண்மைகளை மத்திய அரசு மறைத்து வருகிறது, இது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ன் கீழ், ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளனவா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு, மத்திய வங்கிக்கு (ரிசர்வ் வங்கிக்கு) அவசியமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னாட்சி தேவை. இந்தியாவில் இருந்த அரசுகள், இதை வளர்த்து வந்துள்ளன. மதித்து வந்துள்ளன.

    மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்கள் செயல்பாட்டில் பொதுநலன் கருதியும், இந்திய பொருளாதார தேவைகளின் அடிப்படையிலும் வழிநடத்தப்பட வேண்டும்.

    இந்த நோக்கத்துக்காக, பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

    இந்த ஆலோசனைகள் குறித்து இதுவரை பகிரங்கமாக தெரிவித்தது கிடையாது. இறுதி முடிவுகள் மட்டுமே தெரியப்படுத்தப்படுகின்றன. இந்த ஆலோசனைகள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை அளவிடுகிறது. அதன்பேரில் சாத்தியமாகக் கூடிய தீர்வுகளை எடுக்குமாறு கூறுகிறது. அதை அரசு தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, கடந்த சில வாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 3 தனித்தனி கடிதங்கள் எழுதி இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.   #RBIGovernor #UrjitPatel #Resign
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் வரும் 27-ம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. #RafaleDeal #PMModi #Congress #Maharashtra #AshokChavan
    மும்பை:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. காங்கிரஸ் காலத்தில் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றி 2015-ம் ஆண்டு பாஜக புதிய ஒப்பந்தத்தை போட்டது. அதில் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அம்பானிக்காக பிரதமர் மோடி மக்களையும், ராணுவத்தையும் ஏமாற்றி விட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    ரபேல் ஒப்பந்தத்தில், இந்திய அரசின் வற்புறுத்தலினாலேயே ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் தெரிவித்த கருத்துக்கு, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் 27-ம் தேதி காங்கிரஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் மாபெரும் பேரணி நடைபெறும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷோக் சவான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடிக்கு நண்பரின் தொழில் மீது இருக்கும் ஆர்வம் நாட்டின் மீது இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்து மக்களின் நம்பிக்கையை ஏமாற்றியும், அவர்களை தவறான வழியில் வழிநடத்தியும் வரும் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். #RafaleDeal #PMModi #Congress #Maharashtra #AshokChavan
    ×