search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் - ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்
    X

    ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் - ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
    வியன்னா:

    ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அதிபர் அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக இருந்து வந்தார்.



    இந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளார்.

    இது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.

    இருப்பினும் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி வந்து, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இதே பரிந்துரையை அந்த நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் வான் டிர் பெல்லனிடம் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் கூறுகையில், “முடிந்த வரையில் வெகு விரைவாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் அதிபரிடம் பரிந்துரை செய்து இருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இது போதும் என்று நேர்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதை வீடியோ காட்டி உள்ளது” என குறிப்பிட்டார்.

    இதை அதிபர் அலெக்சாண்டரும் உறுதி செய்து கூறும்போது, “துணைப்பிரதமர் பதவி விலகி விட்டதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் தேவைப்படுகிறது. பிரதமர் செபாஸ்டியன் குர்ஸிடம் விவாதித்து முடிவு எடுப்பேன்” என குறிப்பிட்டார். பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஊழலுக்கு எதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×