செய்திகள்

எகிப்து: மசூதி தாக்குதலில் பலி 234 ஆக உயர்வு - டிரம்ப், மோடி கண்டனம்

Published On 2017-11-24 16:42 GMT   |   Update On 2017-11-24 16:42 GMT
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
கெய்ரோ:

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.



இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “எகிப்து மசூதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். பலியான அனைத்து உயிர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான எகிப்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News